புத்தளம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை பலியெடுத்த நீர்நிலை!


ரஸீன் ரஸ்மின்

புத்தளம் , பாலாவி - தளுவ கடலுக்கு தமது குடும்பத்தினருடன் சென்று, நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் யுவதிகளும், இளைஞர் ஒருவரும் உயிரிழந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை புத்தளம் மாவட்ட மக்களை மாத்திரமின்றி, முழு நாட்டு மக்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

புத்தளம் , தில்லயடி - உமரபாத் பகுதியைச் சேர்ந்த ரம்சான் பாத்திமா ரிஸ்கானா(வயது 19), ரம்சான் பாத்திமா சஹ்ரா (வயது 17) மற்றும் அவர்களுடைய ஒன்றுவிட்ட சகோதரரான இஸ்மத் முஹம்மது உசாம் (வயது 25) ஆகிய மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நான்கு பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிள்ளைகளான இரண்டு இளம் சகோதரிகளும், அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் 25 வயதுடைய இளைஞனும் இந்த துயர சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறித்த இளம் யுவதிகளும், இளைஞரும் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, கடல் அலையில் சிக்கி மூவரும் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், அம்மூவரும் கடலில் குளிக்கவில்லை என்றும் , அவர்கள் கடலுக்கு முன்பாக வெட்டப்பட்டிருந்த அறுவா பகுதியில் உள்ள நீரில் இறங்கி குதூகலித்துக் கொண்டிருந்ததாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

மூன்று உயிர்களை பலிகொடுத்த வேதனை ஒருபக்கம் இருக்க, இந்த சம்பவம் குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்ளில் வெளியாகிய செய்தி அந்தக் குடும்பத்தினரை மேலும் மன வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது .

இது இறைவனின் நாட்டம் என்று சொல்லிவிட்டு இறை நம்பிக்கையுடன் வாழும் நாம் கடந்து சென்றாலும், மனிதன் என்ற அடிப்படையில் இந்த  இழப்புக்களை ஏற்றுக்கொள்ள இதயம் மறுக்கிறதுதான்.

ஒரு மணித்தியாலத்தில் மூன்று பிள்ளைகளையும் கண் முன்னே பறிகொடுத்துவிட்ட பொற்றோர்களுக்கும், குடும்ப உறவினர்களுக்கும் நாம் எப்படிதான் ஆறுதல் சொல்ல முடியும். 

நீர் என்பது மனிதனின் அத்தியாவசியத் தேவை மற்றும் உயிராதாரமாகும். ஆனால், அதே நீர் மக்களுக்கு ஆபத்தான எமனாகவும் மாறிவிடுகிறது. 

விடுமுறையை சந்தேஷமாக கழிப்பதற்காக கடந்த சனிக்கிழமை (06) மாலை 3 மணியளவில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் நுரைச்சோலை - தளுவ 80 வீட்டுத் திடத்திற்கு முன்னால் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு கடலுக்கு சென்றவர்களில், இரண்டு சகோதரிகள் அங்கு வெட்டப்பட்டிருந்த அறுவா பகுதியில் கரையோரத்தில் அருகருகே  நின்றுகொண்டு மாலைப் பொழுதை ரசித்த வண்ணம் இரண்டு சகோதரிகளும் அருகருகே நீருக்குள் இறங்கி குதூகலித்துக் கொண்டிருந்தனர் எனச் சொல்லப்படுகிறது.

அந்த இரண்டு சகோதரிகளும் குதூகலித்துக் கொண்டிருக்கும் அறுவா பகுதியில் ஆழமான குழிகள் இருப்பதை அவர் உணர வாய்ப்பில்லைதான். காரணம் அந்த குழிகளை பாசிகள் மறைத்து வைத்திருக்கிறது.

எதிர்பாராத வகையில் பலத்த காற்று மற்றும் கடும் நீரோட்டம் காரணமாக யாரும் எதிர்பாராத வகையில் அந்த இரண்டு சகோதரிகளையும் அறுவா நீர் இழுத்துச் சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இரண்டு சகோதரிகளையும் நீர் இழுத்துச் செல்வதை அவதானித்த ஒன்றுவிட்ட சகோதரர் நொடிப் பொழுதில் அவ்விருவரையும் காப்பாற்றுவதற்காக நீருக்குள் பாய்ந்திருக்கிறார்.

எனினும், துரதிஷ்டவசமாக இரண்டு சகோதரிகளும் நீருக்குள் மூழ்கிவிட்டனர். இவ்வாறு இரண்டு சகோதரிகளையும் காப்பாற்றுவதற்காக நீருக்குள் பாய்ந்த அந்த இளைஞரும் நீருக்குள் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்தார் எனவும் அதனையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக அந்த இளைஞனின் தந்தை முழுமையாக முயற்சி  எடுத்த போதிலும் அந்த முயற்சியும் பலனளிக்காது குடும்பத்தினர் கண் முன்னே இரண்டு சகோதரிகளும், அந்த இளைஞரும் நீருக்குள் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இவை எல்லாம் கடலுக்கு சென்று ஒரு மணித்தியாலத்திற்குள் நடந்து முடிந்துவிட்டது. என்ன செய்வது , யாரை அழைப்பது என்று தெரியவில்லை. ஏனெனில், அங்கு சென்றவர்கள் பெண்கள் மற்றும் அவர்களின் சிறிய குழந்தைகள். அனைவரின் இதயங்களும் சில நிமிடங்கள் கனத்துப் போகிறது.

கரைக்கு வெளியே நின்றுகொண்டு மூவரையும் அழைக்கின்றனர்... அங்கும் இங்குமாக ஒடோடி உதவிக்கு ஏனையவர்களை அழைக்கின்றனர். ஆனால், அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் திகைத்துப் போய் நிற்கின்றனர்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சில நிமிடங்களில் அங்கு வருகை தந்த பிரதேசவாசிகள், மீனவ தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் நீருக்குள் மூழ்கிய இளம் யுவதிகள் இருவரையும் பத்து, பதினைந்து நிமிடங்களிலும் இளைஞரை சுமார் இருபது நிமிடங்களின் பின்னரும் மீட்டெடுத்தனர்.

மூவரின் உடல்களும் மீட்கப்பட்டு, உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும், அந்த மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அவர்களை பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு சகோதரிகளையும் காப்பாற்றுவதற்காக நீருக்குள் குதித்து உயிரிழந்த இளைஞரான இஸ்மத் முஹம்மது உசாம் சிங்கப்பூரில் ஹோட்டலொன்றில் பணியாற்றி வந்ததுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குடும்பத்தினரை பார்ப்பதற்காக விடுமுறையில் நாட்டுக்கு வருகை தந்திருந்தார் எனவும் கடந்த மாதம் 28 ஆம் திகதி சிங்கப்பூர் செல்ல தயாராக இருந்த போது சில காரணங்களால் அவரது பயணம் தடைப்பட்டதுடன், இம்மாதம் 26 ஆம் திகதி மீண்டும் சிங்கப்பூருக்கு செல்ல இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு இளம் யுவதிகளின் தந்தை முஹம்மது ரம்சான் தொழில் நிமித்தம் சிங்கப்பூரில் இருக்கிறார். தனது நான்கு பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்திருக்கிறார். மூத்த மகள் திருமணமாகி சிங்கப்பூரில் மனது கணவருடன் வசித்து வரும் நிலையில், அவரும் குடும்பத்தினரை பார்ப்பதற்காக புத்தளத்திற்கு வந்திருந்த போதுதான் தனது இரண்டு சகோதரிகளையும் கண் முன்னே பறிகொடுத்து இருக்கிறார். சம்பவம் இடம்பெற்ற போது அவரும் கூடவே இருந்திருக்கிறார்.

மாத்திரமன்றி, சம்பவத்தில் உயிரிழந்த ரம்சான் பாத்திமா ரிஸ்கானா என்பவர் தில்லையடி - அல்ஜித்தாவில் இயங்கி வரும் பெண்கள் அரபு மதரஸா ஒன்றில் கல்வி கற்று பட்டமளிப்பு விழாவுக்காக காத்திருந்தார் என்றும், அவரது சகோதரியான ரம்சான் பாத்திமா சஹ்ரா எனும் மாணவி க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருந்தார் எனவும் குடும்ப உறவினர்கள் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த மூவரின் ஜனாஸாக்கள் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் ஜனாஸா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.

அம்மூவரின் ஜனாஸாக்களும் ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தில்லையாடி ஜம்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் சகோதரிகள் மற்றும் இளைஞன் ஆகியோரது மரணம் முழுப் புத்தளம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தளுவ - 80 வீட்டுத் திட்டத்தில் உள்ள குறித்த கடலுக்கு முன்பக்கத்தில் உள்ள அறுவா வெட்டு பாரிய குழிகளாக காணப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த அறுவா முழுதும் நிரம்பி உள்ள நீரை பாசிகள் மறைத்துள்ளதால் வெளியிடங்களில் இருந்து வரும் மக்கள் அதன் ஆபத்தை உணராது அதற்குள் குளிப்பது, குதூகலிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் எனவும் தாம் அந்தப் பகுதியில் நடமாடுகின்ற போது மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாக மீனவர் ஒருவர் குறிப்பிட்டார்.

நாளாந்தம் அதிகளவில் மக்கள் இந்த பகுதிக்கு வருகை தரும் நிலையில், குறித்த பகுதி ஒரு தடை செய்யப்பட்ட பகுதாக அடையாளப்படுத்தப்பட்டு அதுகுறித்து அறிவித்தல் பலகையொன்றை போட சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அந்த மீனவர் கேட்டுக்கொண்டார்.

தண்ணீரைக் கண்டால் நாம் எல்லோரும் குழந்தைகளாகவே மாறிவிடுகிறோம். அதுபோலதான் அந்த இரண்டு சகோதரிகளும் குழந்தைகளாக நீருக்குள் இறங்கி குதூகலித்துள்ளனர். இது யாராலும் தவறு காண முடியாது.

எனினும், குளம், ஆறுகள், நீரோடை என சுற்றுலாவாக ஒரு இடத்திற்கு செல்லும் போது, அவற்றின் ஆழங்களை உணராமல் அந்த பகுதியைச் சேர்ந்தவர்களின் வழிகாட்டுதல்களை , ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளாமல் தன்னிச்சையாக செயற்படுவதுதான் நாம் செய்யும் மிகப் பெரிய தவறாகும். அதன் பாரதூரமான விளைவுகளை சிந்திக்காமல் இழந்த பின்னர் யோசிப்பதில் எந்த பயனும் இல்லை. 

மேலும், குறித்த பகுதியில் இதற்கு முன்பும் இதுபோன்ற பல உயரிழப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக அந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்த பகுதியில் போன மூன்று உயிர்களும் இதுவே கடைசியாக இருக்க வேண்டும். எனவே , இந்த விடயத்தில் பொறுப்புமிக்க அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் எடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல் பலகை என்பவற்றை அவசரமாக காட்சிப்படுத்த வேண்டும்.

ஆண்டுதோறும் உலகளவில் இலட்சக்கணக்கானோர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். இலங்கையிலும் நாளாந்தம் பலர் இவ்வாறான விபத்துக்களில் பலியாகின்றனர்.

இலங்கையில் 2026 ஆம் ஆண்டின் மே மாதம் வரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி சுமார் 230 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் (சித்திரை புத்தாண்டு விடுமுறை காலத்தில்) இடம்பெற்ற நீர்நிலைப் பயணம் மற்றும் குளியலின் போது மட்டும் 27 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர்.

நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க அரசாங்கம் மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - விடிவெள்ளி (2026.06.11)

Post a Comment

Previous Post Next Post