ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - ரத்மல்யாய பகுதியின் தொடர் வெள்ள நீர்ப்பிரச்சினைக்கு முறையான மற்றும் நிலையான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான விசேட அரசியல் பிரமுகர்கள், அரச அரதிகாரிகளின் கூட்டு கள விஜயமொன்று இடம்பெற்றது.
புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம்.கியாஸ் ஆசிரியர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசலிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த கள விஜயம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹமட் பைஸல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த கள விஜயத்தில் புத்தளம் பிரதேச சபை தலைவர் ரதிக சஞ்சீவ, புத்தளம் மாநகர மேயர் ரின்ஷாட் அஹ்மட், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம்.கியாஸ் ஆசிரியர், புத்தளம் மாநக சபை உறுப்பினர்களான எம்.ரி.எம்.சஹ்ரான், இப்ளால் அமீன், புத்தளம் பிரதேச செயலாளர் , அனர்த்த முகாமைத்துவ குழு அதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் என துறை சார்ந்த அதிகாரிகள் குழுவினர் ரத்மல்யாய - பெரிய குளம் தெற்கு (அல் காசிம் சிட்டி) பகுதிக்கு வியஜம் ஒன்றை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தனர்.
இப்பிரதேச மக்கள் பல வருடங்களாக வெள்ளப் பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருவதுடன், இதனால் மன அழுத்தம் , பாதுகாப்பின்மை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வரும் நிலையில், இதற்கு அவசரமாக ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் திணைக்களங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புடன் தீர்வு காண்பதே இவ்விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.
மேலும், வெள்ள நீர் வடிந்தோடுவதில் உள்ள தடைகளை நீக்கி, இப்பகுதி மக்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்துவதற்குரிய துரித மற்றும் விஞ்ஞானபூர்வமான எற்பாடுகளை மேற்கொள்ள இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
குறித்த பகுதியில் வெள்ள நீர்ப்பிரச்சினைக்கு முறையான மற்றும் நிலையான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


