ரஸீன் ரஸ்மின்
2025ஆம் ஆண்டு சாதாரண பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் (19) இரவு வெளியாகிய நிலையில், மதுரங்குளி - கணமூலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவ, மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர் என பாடசாலையின் அதிபர் பி.எம்.முஸ்னி தெரிவித்தார்.
இந்த பாடசாலையில் இருந்து சாதாரண தரப் பரீட்சைக்கு 34 மாணவர்கள் தோற்றியிருந்த போதிலும், 82 சதவீதமானோர் உயர் தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதுடன், எம்.எப்.எப்.அல்ஹா என்ற மாணவி அனைத்து பாடங்களிலும் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன், எம்.எம்.எம்.முபா 8 ஏ, பி மற்றும் கே.ஆர்.எப்.ரிஸ்னா 8 ஏ, பி ஆகிய மாணவிகளும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
அத்துடன் பரீட்சைக்கு தோற்றிய ஏனைய மாணவ, மாணவிகளும் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் அதிபர் கூறினார்.
மேலும், பரீட்சையில் சித்திபெறத் தவறிய மாணவர்கள் தமது முயற்சிகளை கைவிடாது தொடர்ந்தும் முன்னேறி செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தோல்வி என்பது வாழ்க்கையின் முடிவல்ல. அது புதிய பாதைகளைத் தேர்ந்தெடுக்கக் கிடைத்த வாய்ப்பாகும். எனவே, மன அழுத்தத்தைக் குறைத்து, உங்கள் பலவீனங்களை ஆராய்ந்து, உரிய வழிகாட்டுதல்களுடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதுதான் உங்கள் எதிர்காலத்திற்கு பிரகாசமாக அமையும் என்றும் பரீட்சையில் சித்திபெறத் தவறிய மாணவர்களுக்கு தனது ஆலோசனைகளை முன்வைத்தார்.
கணமூலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு காரணமாக இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , பழைய மாணவர்கள் மற்றும் பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பாடசாலை அதிபர் பி.எம்.முஸ்னி மேலும் தெரிவித்தார்.
