இஷாம் மரிக்கார் கைதாகி பிணையில் விடுதலை!


ரஸீன் ரஸ்மின்

தமது கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, அச்சுறுத்தல் விடுத்தார் என புத்தளம் தள வைத்தியசாலை நிர்வாகம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, சனிக்கிழமை (02) கைது செய்யப்பட்ட புத்தளம் மாநகர சபை உறுப்பினர் இஷாம் மரிக்கார் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் தள வைத்தியசாலையில் நீண்ட கால பிரச்சினையாக காணப்பட்டு வரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லைகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் குறித்த மாநகர சபை உறுப்பினர் இஷாம் மரிக்கார் தொடர்ச்சியாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த நிலையில் கடந்த வாரம் தனது ஒன்பது மாத பிள்ளையுடன் புத்தளம் தள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற தாய் ஒருவரை வைத்தியசாலையில் கட்டாக் காலியாக சுற்றித்திரியும் நாயொன்று  கடித்ததில் அந்த தாயும், குழந்தையும் காயமடைந்த நிலையில் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் புத்தளம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்த்தியையும், கவலையையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து, கடந்த ஏப்ரல் 28 ம் திகதி வைத்தியசாலைக்கு நேரடியாக சென்ற புத்தளம் மாநகர சபை உறுப்பினர் இஷாம் மரிக்கார், நிலைமைகளை அவதனித்ததன் பின்னர் வைத்தியசாலையில் காணப்படும் கட்டாக்காலி நாய்களை அங்கிருந்து வெளியேற்றாது போனால் இது போன்று இன்னும் பலர் இவ்வாறு நாய் கடிக்கு உள்ளாக நேரிடும் என்றும், மக்கள் வைத்தியசாலைக்கு வருவதற்கு அச்சப்படுவதாகவும் வைத்தியசாலை நிர்வாகத்துடன் முரண்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த மாநகர சபை உறுப்பினர் அரச பணிக்கு இடையூறுகளை ஏற்படுத்தி, அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக புத்தளம் தள வைத்தியசாலை நிர்வாகத்தினரால் புத்தளம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்படதாக கூறப்படுகிறது.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து, புத்தளம் மாநகர சபை உறுப்பினரை கைது செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில், சனிக்கிழமை (02) காலை புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற புத்தளம் மாநகர சபை உறுப்பினர் இஷாம் மரிக்கார் , பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அவர் அன்றைய தினமே புத்தளம் மாவட்ட பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

புத்தளம் தள வைத்தியசாலையில் நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் கட்டிடத்திற்குள் கட்டாக்காலி நாய்களின் தொல்லை பல வருடங்களாக காணப்படுவதாக மக்கள் தொடர்ச்சியாக விசனம் தெரிவிக்கின்றனர்.

கர்ப்பிணித் தாய்மார்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் பிரிவு, சிறுவர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் பிரிவு, விபத்து பிரிவு, ஆண்கள், பெண்கள் தங்கியிருந்து கிகிச்சை பிரிவு, கிளினிக் நிலையம் ஆகிய இடங்களில் இவ்வாறு கட்டாக்காலி நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்காணப்படுகின்றது.

குறித்த கட்டாக்காலி நாய்களின் நடமாட்டத்தினால் வைத்தியாசலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களும், அவர்களை பார்வையிட வரும் உறவினர்களும் அச்சமடைவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.


Post a Comment

Previous Post Next Post