சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்தவர் சிறைச்சாலைக்கு மாற்றம்!


ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - ரத்மல்யாய பகுதியில் முச்சக்கர வண்டியின் சாரதியை கொலை செய்தார் எனும் சந்தேகத்தின் பெயரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவில் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு புத்தளம் மாவட்ட நீதவான் இன்று (03) உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், சந்தேக நபரான சிறுவனை 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று (03) புத்தளம் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த இரண்டு  உத்தரவும் பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் உயிரிழந்தவரின் குடும்பம் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மற்றும் சப்ராஸ் முஹம்மட் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது, கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான குறித்த சிறுவனும் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தின் உத்தரவில் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான குறித்த சிறுவன் மூன்று தடவைகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளமை ஆதாரத்துடன் இருப்பதாக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் நீதிவான் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், அதற்கான ஆதாரங்களையும் மன்றில் சாட்சியுடன் வெளிப்படுத்தினார்.

நீதிபதியினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதற்கான கையொப்பமிட்டு சந்தேக நபரை, சிறைச்சாலை அல்லது சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு ஒப்படைக்கும் போது அந்த நபரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவர்களின் கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவில் சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர், மூன்று தடவைகள் தப்பிச் சென்றுள்ளார்.  இறுதியாக மே மாதம் 30 ஆம் திகதி தப்பிச் சென்ற நிலையில், புத்தளம் நகரில் நபர் ஒருவரினால் பிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவில் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த சிறுவன் தான் நினைத்தபடி அங்கிருந்து தப்பிச் சென்று வெளியே வந்து சுதந்திரமாக சுற்றித் திரிகிறார். மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார். இது பார்ப்பதற்கு ஒரு நகைச்சுவையாகவே உள்ளது. நீதித்துறையின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை இல்லாமல் செய்கிறது.

பொறுப்புக் கூற வேண்டியவர்கள் உண்மைகளை மறைக்கிறார்கள். சத்தேக நபருக்கு மறைமுகமாக உதவி ஒத்துழைப்புக்களை செய்கிறார்கள்.

எனவே, நீதி நடைமுறையில் உள்ளது என்பதை மக்கள் முழுமையாக நம்ப வேண்டும். சிறுவயதில் ஒரு கொலையை செய்துவிட்டு சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருக்கின்ற போது தான் செய்த குற்றத்தை உணர முடியாத இந்த சிறுவன் கட்டுப்படுத்த முடியாத ஒரு நபராகவே காணப்படுகிறார். இவர் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருப்பது பொருத்தமில்லை என்றும் அவரை சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மன்றில் வாதிட்டார்.

இதன்போது சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள குறித்த சிறுவன், சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்து இரண்டு தடவைகள் தப்பித்துச் சென்றதாகவும், மூன்றாவது தடவை தப்பிச் சென்றார் என்ற குற்றச்சாட்டை மறுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது தடவையாக தப்பிச் சென்றதாக சமூக தளங்களில் வெளியிடப்பட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டதாகவும் அவர் அப்போது சிறுவர் பராமரிப்பு இல்லத்தில்தான் இருந்தார் என்றும் கூறினார்.

மேலும், சந்தேக நபரான சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அதற்கான மருத்துவ சான்றிதழ் இருப்பதாகவும் சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதன்போது குறுக்கிட்ட சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், நீதிமன்றத்தின் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபரை அவரது பெற்றோர் தாம் நினைத்தபடி தனிப்பட்ட வைத்தியர் ஒருவரை அழைத்துச் செல்லவோ பரிசோதிக்கவோ முடியாது. நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும். மாத்திரமன்றி, சந்தேக நபர் ஆரோக்கியமாக இருப்பதாக சிறுவர் பராமரிப்பு இல்லம் அறிக்கை வழங்கியிருக்கிறது.

எனவே, தனியார் வைத்தியரின் அறிக்கையை கவனத்தில் கொள்ளாது, சிறுவர் பராமரிப்பு இல்லத்தின் அறிக்கையை கவனத்தில் எடுக்குமாறும் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தனது வாதத்தை முன்வைத்தார்.

இரண்டு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிவான், கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சிறுவனை சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்து சிறைச்சாலைக்கு மாற்றுமாறு உத்தரவிட்டு, 17ஆம் திகதி  விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த வழக்கு விசாரணையின் பின்னர் இந்த வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாதம்  21ஆம் திகதி இரவு உயிரிழந்தவரின் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர், சவாரி ஒன்றிற்குச் செல்வதாகக் கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளார். 

பின்னர், மறுநாள் (22) அதிகாலை புத்தளம் - ரத்மல்யாய - அடப்பனவில்லு பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றில் சடலம் ஒன்றைக் கண்ட பிரதேசவாசி ஒருவர், அது குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், முந்தைய நாள் வாடகைக்குச் சென்ற முச்சக்கர வண்டியின் உரிமையாளர் 72 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தைநான ஆதம் பாவா அப்துல் லதீப் என அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டார்.

இந்த நிலையில், குறித்த முச்சக்கர வண்டியின் சாரதியை கொலை செய்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினமே புத்தளம் பொலிஸாரால் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post