மக்கள் வாக்களித்து அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தினார்கள், மறுபுறம் மக்கள் ஆபத்தில் இருக்கும்போது அவர்களுக்குத் துணையாக நிற்க அரசாங்கம் தவறிவிட்டமையால் மக்கள் மத்தியில் ஆளும் தரப்பு மீதான நம்பிக்கை சரிந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் இடர்நிலைகள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தினால் மக்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றிய மற்றும் கிராம மட்டத்திலான குழுக்களில் அங்கம் வகித்தவர்களுக்கு தற்போது கிராமங்களில் பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
பதுளை மற்றும் குருநாகல் போன்ற மாவட்டங்களில் இயற்கை அனர்த்தங்களினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கிடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லை.
பதுளை மாவட்டத்தில் பலத்த மழையினால் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன, பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிவாரண உதவிகள் முறையாக மக்களைச் சென்றடையவில்லை.
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தில் குருநாகல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கான மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்குக்கூட அரசாங்கம் விழாக்களை நடாத்துவது வேடிக்கையானது .
சுகாதாரத் துறையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பான சர்ச்சைகளை அவர் கடுமையாகச் சாடினார்.
'கடந்த காலங்களில் இத்தகைய தவறுகளுக்கு அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறியவர்கள், இன்று அதிகாரிகளின் மீது பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார்கள்'
ஜே.வி.பி எப்போதும் ஒழுக்கம் பற்றிப் பேசும் ஒரு கட்சி என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகள் அதற்கு முரணாக இருப்பதாகக் கூறினார்.
பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகள் அரசியல் அழுத்தங்களுக்கு அஞ்சிச் செயல்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
அரசாங்கம் வெறும் மேடைப் பேச்சுகளுடன் நின்றுவிடாமல், களத்திற்குச் சென்று மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
