மர்ம திரவத்தை அருந்திய இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!


ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - நுரைச்சோலை லக்விஜய அனல்மின்சாரத்திற்கு அண்மித்த பகுதியில் கடலில் மிதந்து வந்த ஒரு வகையான திரவத்தை பருகியதாக கூறப்படும் இரு கடற்றொழிலாளர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த திரவத்தை பருகியதாக கூறப்படும் மேலும் இருவர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முனிசாமி விஸ்வா (வயது 50) மற்றும் வீரசிங்க ஆராச்சிலாகே துஷார சம்பத் (வயது 40) ஆகிய இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

நுரைச்சோலை பகுதியில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நான்கு கடற்றொழிலாளர்கள், கடலில் மிதந்து வந்த மர்மமான திரவம் நிரப்பப்பட்ட போத்தல் ஒன்றைக் கண்டெடுத்து அதனை அருந்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த திரவத்தைக் பருகியதை தொடர்ந்து, அந்த நால்வரும் கடும் சுகவீனமடைந்ததுடன், அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் ஏனைய மூவரையும் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த பின்னர், மேலுமொருவர் உயிரிழந்துள்ளார்.

ஏனைய இரண்டு கடற்தொழிலாளர்களும் புத்தளம் தள வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தநிலையில், குறித்த மீனவர்கள் அருந்தியது வெளிநாட்டு மதுபானமா அல்லது அது என்ன திரவம்? அது எங்கிருந்து வந்தது? என்பது குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Post a Comment

Previous Post Next Post