ரஸீன் ரஸ்மின்
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலாகத்திற்குற்பட்ட மதுரங்குளி - தொடுவா பிரதான பாதையை இரட்டைப் பாதையாக புனரமைத்துக் கொடுக்குமாறு மதுங்குளி வர்த்தக மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தொழிலதிபர் எம்.எஸ்.ரி.அமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரங்குளி – தொடுவா பிரதான வீதியின் கடையாமோட்டை (டச்சுப் பாலம்) பகுதியில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம் அரசியல் பிரமுகர்களால் மக்கள் பாவனைக்காக நேற்றுமுன்தினம் (07) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜானக, முஹம்மது பைஸல், புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் மற்றும் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் ஏ.எஸ்.எம். ரிகாஸ் ஆகியோரிடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.
சுமார் 50 வருட கால பழமை வாய்ந்த இந்தப் பாலத்தை ஒரு குறுகிய காலத்திற்குள் மிகவும் நேர்த்தியான முறையில் நிர்மாணித்துக் கொடுத்தமைக்காக அரசாங்கத்திற்கும், இதற்காக முழுமையாக முயற்சிகள் செய்த அனைவருக்கும் மதுரங்குளி வர்த்தக சங்கம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இதன்போது கூறினார்.
இந்தப் பாலத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பாலத்தை உடைத்து புனரமைப்பதாக இருந்தால் பாலத்திற்கு அருகே தற்காலிக வீதி அமைக்கப்பட வேண்டும் எனவும் அதற்குத் தேவையான நிதி வசதிகள் இல்லாத காரணத்தால் பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்டோர் இந்த விடயம் தொடர்பில் மதுரங்குளி வர்த்தக சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும் அவர் இங்கு கூறினார்.
மேலும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைஸலும் தற்காலிக வீதி அமைப்பது தொடர்பில் மதுரங்குளி வர்த்தக சங்கத்தோடு பேசினார். அவர்களின் அந்த கோரிக்கைக்கு அமைய மதுரங்குளி வர்த்தக சங்கம் மற்றும் ஏனைய தனவந்தர்களின் நிதி பங்களிப்பில் 10 நாட்களுக்குள் தற்காலிக பாதையை அமைத்துக் கொடுத்தோம்.
இந்தப் பிரதேசமானது சுற்றுலாத்துறையிலும் தும்பு, தேங்காய் ஏற்றுமதியிலும் இலங்கைக்கு அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொடுப்பதில் அதிக பங்கு வகிக்கின்றது என்றும் சுட்டக்காட்டினார்.
மேலும், இலங்கையின் பொருளாதாரத்திற்கு டொலரை பெற்றுக்கொடுப்பதிலும் இந்தப் பிரதேசம் நீண்ட காலமாக அதிக பங்களிப்பை வழங்கி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்தப் பிரதேசத்தில் 500 இற்கும் அதிகமான தும்பு தொழிற்சாலைகள் காணப்படுவதுடன் தும்பு, மீன், மறக்கறி வகைகள், பழவகைகள், இறால் , கைத்தொழிற்சாலைகளின் உற்பத்திகள் என்பனவற்றை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக இந்த வீதியூடாக நாளாந்தம் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்வதாகவும் அவர் கூறினார்.
மாத்திரமின்றி, கற்பிட்டி தொடக்கம் உடப்பு வரையிலான நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் இந்த வீதியை பயன்படுத்தும் ஒரு பிரதான வீதியாகவும் மதுரங்குளி - தொடுவா வீதி காணப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
எனவே , பொதுமக்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் நலன்களை கவனத்திற்கொண்டு விஷேட திட்டத்தின் கீழ் மதுரங்குளி - தொடுவா பிரதான வீதியை இரட்டைப் பாதையாக மாற்றி புனரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மதுரங்குளி நகரில் வர்த்தக வலயம் ஒன்றை அமைப்பதன் அவசியம் குறித்தும் மதுங்குளி வர்த்தக சங்கம் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் என்பனவற்றின் தலைவர் தொழிலதிபர் எம்.எஸ்.ரி.அமான் தெளிவுபடுத்தினார்.
இந்தப் பிரதேசத்தில் உள்ள உற்பத்திகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லவும், உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும் மதுரங்குளி பிரதேசத்தில் சர்வதேச கண்காட்சி மையம் ஒன்றை நிறுவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், தென்னை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கவும் தெங்கு அபிவிருத்தி சபையின் அலுவலகம் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் எழுத்து மூலம் அனுப்பி வைத்துள்ளதாகவும் , இதுதொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மதுங்குளி வர்த்தக சங்கம் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் என்பனவற்றின் தலைவர் தொழிலதிபர் எம்.எஸ்.ரி.அமான் , பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
குறித்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜானக, முஹம்மது பைஸல், மேற்படி இரட்டைப் பாதை மற்றும் வர்த்தக வலையம் உள்ளிட்ட அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்துவதாக வாக்குறுதியளித்துள்ளனர்.