ரஸீன் ரஸ்மின்
கற்பிட்டி பிரதேச சபைக்குற்பட்ட ஆலங்குடா பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான சிறப்பு கலந்துரையாடலொன்று நேற்று (20) இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் ஆலங்குடா செயற்பாட்டு குழு உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், கற்பிட்டி பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். ரிகாஸ் ஆலங்குடாவிற்கு விஜயம் செய்து மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார்.
இந்தக் கலந்துரையாடலில் மஸ்ஜித் நிர்வாகிகள், உலமாக்கள், தேசிய மக்கள் சக்தியின் ஆலங்குடா செயற்பாட்டு குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஆலங்குடா மக்களின் அடிப்படை தேவைகள், எதிர்கால அபிவிருத்திகள் குறித்து கற்பிட்டி பிரதேச தவிசாளரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
ஆலங்குடா பகுதியில் உள்ள கிளினிக் சென்டர் புனர்நிர்மாணம் செய்தல், விளையாட்டு மைதானம் அபிவிருத்தி, பாதைகள் அபிவிருத்தி மற்றும் ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பௌதீக வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்தி தொடர்பாக இதன்போது பிரதேச சபை தவிசாளருக்கு தெளிவுபடுத்தப்பட்டன.
ஆலங்குடா மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் , அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மிகவும் கவனமாக கேட்டறிந்து கொண்ட கற்பிட்டி பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம்.ரிகாஸ், மிக விரைவில் குறித்த வேலைத்திட்டங்களை கட்டம் கட்டமாக நிறைவேற்றித்தறுவதாக வாக்குறுதியளித்தார்.