ரஸீன் ரஸ்மின்
புத்தளம் மாநகர சபை எல்லைக்குற்பட்ட பகுதிகளில் கட்டாக்காலிகளாக சுற்றித் திரிந்த மாடுகள் நேற்று (08) புத்தளம் மாநகர சபையினால் பிடிக்கப்பட்டன.
புத்தளம் மாநகர சபைக்குட்பட்ட பிரதான மற்றும் உள்வீதிகள், பொது இடங்கள் என்பவற்றில் இவ்வாறு கட்டாக்காலி மாடுகள் பகல மற்றும் இரவு நேரங்களில் படுத்துறங்குவது, சுற்றித் திரிவதால் அதிகமான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், புத்தளம் மாநகர சபை மேயர் ரின்ஷாட் அஹ்மட்டின் ஆலோசனைக்கு அமைய, மாநகர சபை கட்டளைச் சட்டத்திற்கு அமைய கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் புத்தளம் மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், கட்டாக்காலிகளாக சுற்றித்திரியும் மாடுகளை உரிய முறையில் பராமறிக்குமாறும், மீறி மாநகர சபையினால் பிடிக்கப்படும் மாடுகளுக்கு தண்டப்பணம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் என்பன மாட்டின் உரிமையாளர்களிடமிருந்து அறவிடப்படும் என்றும் புத்தளம் மாநகர சபையினால் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுமக்களுக்கான அறிவித்தல் ஒன்றும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புத்தளம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற கட்டாக்காலி மாடுகள் மாநகர சபையினால் பிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பிடிக்கப்பட்ட மாடுகளில் சிலவற்றை அதன் உரிமையாளர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தி உரிய தண்ட பணத்தையும் செலுத்தி கொண்டு சென்றுள்ளதுடன், உரிமை கோரப்படாத இன்னும் சில மாடுகள் காணப்படுவதுடன் அவை மாநகர சபையின் பராமறிப்பில் உள்ளதாகவும் புத்தளம் மாநகர சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறு மாநகர சபையின் பராமறிப்பில் உள்ள உரிமை கோரப்படாத மாடுகளை அதன் உரிமையாளர்கள் தண்டப்பணத்தை செலுத்தி கொண்டு செல்லாவிட்டால் அந்த மாடுகள் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புத்தளம் மாநகர சபை அறிவித்துள்ளது.