ரஸீன் ரஸ்மின்
புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவில மற்றும் நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவக்காடு ஆகிய பகுதிகளில் இருந்து ஐந்து உயர் சக்தி எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன், சந்தேக நபர்கள் நான்கு பேர் நேற்று (19) சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி பொலிஸாரும் , புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போதே குறித்த ஐந்து மோட்டார் சைக்கிள்களும், 50, 45 மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட நான்கு சந்தேக நபர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரினால் கைப்பற்றப்பட்ட உயர் சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள்கள் சுமார் மூன்று கோடிக்கும் அதிக பெறுமதியுடையது என விசாரணைகளில் தெரியயவந்துள்ளது.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், நாட்டிற்குள் கொண்டு வர தடைசெய்யப்பட்ட 800 மற்றும் 400 எஞ்சின் திறன் கொண்ட நான்கு மோட்டார் சைக்கிள்கள் என்றும், எவ்வித ஆவணங்களும் இல்லாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 எஞ்சின் திறன் கொண்ட ஒரு மோட்டார் சைக்கிளும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இந்த மோட்டார் சைக்கிள்கள் வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், சில மோட்டார் சைக்கிள்கள் இரவில் மாத்திரம் இரகசியமாக ஓட்டிச் செல்லப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 800 மற்றும் 400 எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் நாட்டில் பதிவு செய்யப்படவில்லை என்றும், 250 எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் மாத்திரம் பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் போலியான இலக்கத் தகடுகள் காணப்பட்டதாகவும் பொலிஸாரும், விஷேட அதிரடிப்படையினரும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்த மோட்டார் சைக்கிள்களை சட்விரோதமாக கடல்வழியாக நாட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கற்பிட்டி பொலிஸாரும், புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.