ரஸீன் ரஸ்மின்
புத்தளம் மாவட்டத்தில் காணப்படும் காட்டு யானை - மனித மோதல்களைக் கட்டுப்படுத்த அண்மைக்காலமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (18) புத்தளம் மாவட்ட செயலகத்தில் சிறப்பு கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான், முஹம்மது பைஸல், புத்தளம் மாவட்டச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவின் பிரதானிகள், அரச அதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது யானை - மனித மோதலை நிர்வகிப்பதற்கான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விரிவாக கலந்துரையாடப்பட்டன.
மேலும், காட்டு யானை - மனித மோதல்கள் அதிகம் உள்ள கிராமங்களைப் பாதுகாக்கும் வகையில் கிராமத்தைச் சுற்றி அமைக்கப்படவுள்ள மின்வேலிக்கான முன்னோடித் திட்டம் தொடர்பிலும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
யானை மின்சார வேலி விஸ்தரிப்பு மற்றும் பராமரிததல் , பாதுகாப்பு காவலரன் அமைத்தல், யானைகளை பாதுகாப்பாக தூரப்படுத்தல், யானை வெடிகளை வழங்குதல், விலங்குகளின் போசாக்கு தேவைகளை பூர்த்தி செய்தல் (தேவையற்ற கிளைகளை அகற்றுதல்), மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், யானை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல், மின்சார வேலி அமைப்பை பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல், இழப்பீடு வழங்குதல் என்பன தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.