கொழும்பு ஆசிரியர் எமக்கு வேண்டாம்; புத்தளத்தில் வெடித்த போராட்டம்!


ரஸீன் ரஸ்மின், எம்.யூ.எம்.சனூன்

கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் கணித பாட ( ஆங்கில மொழி )  ஆசிரியரை  கொழும்பிலிருந்து புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்வதற்கு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரிக்கு முன்பாக இன்று (9) வெள்ளிக்கிழமை காலை பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

கொழும்பு பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் தில்ஷி அம்ஷிகா எனும் மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதினால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தில், சந்தேக நபராக கருதப்படும் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

மேற்படி இடமாற்றம் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரினால் கடந்த 7ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த இடமாற்றம் தொடர்பாக கொழும் மற்றும் வடமேல் மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்களுக்கும், கொழும்பு மற்றும் புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் குறித்த இரண்டு அதிபர்களுக்கும் கடிதத்தின் பிரதிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பாரிய குற்றச்சாட்டு ஒன்றுடன் தொடர்புடைய கணித பாட ஆசிரியரை பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது என்பதை வலியுறுத்தி புத்தளம் மக்களால் மேற்படி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 'சீர் திருத்தப் பள்ளி அல்ல, புத்தளம்', 'அநீதியான நியமனத்தை நீதியாக எதிர்க்கிறோம்', 'ஒழுக்கம் கெட்ட ஆசிரியரை பணி நீக்கம் செய்', 'இடைநிறுத்தப்பட வேண்டிய ஆசிரியர், இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டிக்கிறோம்', 'தவறு செய்து தண்டிக்கப்பட வேண்டிய அரச அதிகாரிகளின் சிறைச்சாலை அல்ல புத்தளம், புத்தளம் இனியும் இதனை அனுமதிக்காது' இதுபோன்ற மூன்று மொழிகளில் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு புத்தளம் மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும், தனது உயிரை மாய்த்துக் கொண்ட குறித்த மாணவியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.



Post a Comment

Previous Post Next Post