ரஸீன் ரஸ்மின்
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இரவு ரத்மல்யாய – முல்லை ஸ்கீம் கிராமத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் சார்பில் இம்முறை புத்தளம் பிரதேச சபைக்கு ரத்மல்யாய வட்டாரத்தில் இருந்து உறுப்பினராக தெரிவான முஹம்மது கியாஸ் ஆசிரியர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
முல்லை ஸ்கீம் கிராமம் சார்பில் ஊர் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, முல்லை ஸ்கீம் கிராமத்தில் காணப்படும் வெள்ளப் பிரச்சினை, பாலங்கள் அமைத்தல், உள்வீதிகள் புனரமைப்பு, உள்ளிட்ட கிராம மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பாக கிராம மக்களால் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.
அத்துடன், அதிக குடும்பங்களை கொண்டிருக்கும் ரத்மல்யாய கிராம சேவகர் பிரிவை இரண்டு, மூன்று கிராம சேவகர் பிரிவுகளாக பிரிப்பதன் அவசியம் பற்றியும் ஊர்மக்களினால் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
ரத்மல்யாய கிராம சேவகர் பிரிவை பிரிக்கும் வரை, குறித்த கிராம சேவகர் பிரிவில் கடமைபுரியும் கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரை ஒரே நேரத்தில் வாரத்தில் ஒருநாள் முல்லை ஸ்கீம் கிராமத்திற்கு வருகை தந்து பொதுக்களுக்கு சேவையாற்றுவதற்குரிய ஏற்பாடுகளை செய்து தருமாறும், அதற்குத் தேவையான இடவசதிகளை செய்து தருவதாகவும், இதனால் முல்லை ஸ்கீம், 100 வீட்டுத்திட்டம், அல்காசிமி சிட்டி மக்களும் பயனடைவார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் முல்லை ஸ்கீம் கிராமத்தைச் சேர்ந்த மக்களில் பலர் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தமைக்காக தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் இதன்போது குறிப்பிட்டார்.
ரத்மல்யாய கிராம சேவகர் பிரிவை பிரிக்கும் வரை, குறித்த கிராம சேவகர் பிரிவில் கடமைபுரியும் கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரை வாரத்தில் ஒருநாள் இங்கு வந்து பணியாற்றுவதற்கு தேவையான நவடிக்கைகளை உரிய அதிகாரிகளோடு பேசி அதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இங்கு கூறினார்.
அத்துடன், அரசாங்கத்தின் ஊடாக புத்தளம் மாவட்டத்தில் முன்னெடுக்கவுள்ள அபிவிருத்தி திட்டங்களில் முல்லை ஸ்கீம் கிராமத்தையும் உள்வாங்குவதாகவும், தேவை அடிப்படையில் முன்னுரிமைப்படுத்தி அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதாகவும் கூறினார்.
அத்தோடு, வெள்ளப்பிரச்சினையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல், வெள்ளப்பிரச்சினைக்கு மிக முக்கியமானது என கிராம மக்களால் அடையாளப்படுத்தப்பட்ட பாலத்தினை அவசரமாக நிர்மாணிக்க தேவையான நடவடிக்கைகளை இந்த மாதமே அரம்பிப்பதாகவும் இங்கு வாக்குறுதியளித்தார்.
ஏனைய அபிவிருத்திப் பணிகளை பட்டியலிட்டு பிரதேச சபை ஊடாக முன்னெடுக்க முடியுமான பணிகளை பிரதேச சபை ஊடாகவும், ஏனைய பணிகளை தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஊடாகவும் முன்னெடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் குறிப்பிட்டார்.
மாத்திரமின்றி, அல்காசிமி சிட்டி கிராமத்தில் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள நிலையில் காணப்படும் வைத்தியசாலையை மீளவும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இங்கு சுட்டிக்காட்டி னார்.
மட்டுமன்றி, முல்லை ஸ்கீம் கிராமத்தில் வட்டார குழு ஒன்றை அவசரமாக அமைக்குமாறும், அந்த குழுவின் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தக் கிராமத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி, இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களையும், பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதன்போது, தேசிய மக்கள் சக்தி சார்பில் ரத்மல்யாய வட்டாரத்தில் இருந்து புத்தளம் பிரதேச சபைக்கு தெரிவான முஹம்மது கியாஸ் ஆசிரியரும் தனக்கு வாக்களித்தமைக்காக முல்லை ஸ்கீம் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் மற்றும் பிரதேச சபைக்கு தெரிவான முஹம்மது கியாஸ் ஆசிரியர் உள்ளிட்ட குழுவினர் முல்லை ஸ்கீம் கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பகுதிகளையும், கடந்த காலங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உள்வீகளையும் சென்று பார்வையிட்டதுடன், பொதுமக்களையும் சந்தித்துக் கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.