வைத்தியரை இடமாற்ற கோரி கொத்தாந்தீவு வைத்தியசாலை முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!

ரஸீன் ரஸ்மின், எம்.ஏ.ஏ.காசிம்

புத்தளம் மாவட்டத்தின், முந்தல் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட கொத்தாந்தீவு கிராமிய  வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி நேற்று வெள்ளிக்கிழமை கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

புத்தளம் மாவட்டத்தின், முந்தல் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட கொத்தாந்தீவு கிராமிய  வைத்தியசாலைக்கு நேற்று வெள்ளிக்கிழமை காலை அழைத்துவரப்பட்ட நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளிப்பதற்காக அங்கு வைத்தியர் இல்லாமையினால் குறித்த நோயாளி அங்கிருந்து உடனடியாக முந்தல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொத்தாந்தீவு, பெருக்குவற்றானைச் சேர்ந்த 60 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில், உறவினர்களால் கொத்தாந்தீவு கிராமிய  வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இதன்போது, அங்கு கடமைபுரியும் வைத்தியர் அந்த சமயத்தில் வைத்தியசாலைக்கு சமூகமளிக்கவில்லை என அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, குறித்த நோயாளி அங்கிருந்து முந்தல் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

மேலும், குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் நேற்றைய தினம் கடமைக்கு வருகை தராமையினால் மருத்துவ தேவைக்கு வருகை தந்த அதிகமான நோயாளிகள், பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன், சிகிச்சை பெறாமலேயே தமது வீடுகளுக்கும் திரும்பிச் சென்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கொந்தாந்தீவு கிராமிய வைத்தியசாலையை சுற்றிவளைத்து, வைத்தியசாலையின் பிரதான நுழைவாயலை மறைத்து வைத்தியருக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியவாறும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இதன்போது அங்கு அமைதியின்மையும் ஏற்பட்டது.

உடப்பு பொலிஸாருக்கு மேலதிகமாக முந்தல் மற்றும் நுரைச்சோலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன், வைத்தியசாலையின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

குறித்த வைத்தியர் நாளாந்தம் உரிய நேரத்திற்கு சமூகமளிப்பதில்லை என்றும் இவ்வாறு பொறுப்பற்ற வகையில் கடமைகளை துஷ்பிரயோகம் செய்வதாகவும், நிர்வாக விடயங்களில் கவனம் செலுத்தாமல், கடமைநேரத்திலும் வைத்தியசாலைக்கு வெளியே சுற்றித்திரிவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.

சுமார் 50 வருடம் பழமை வாய்ந்த குறித்த வைத்தியசாலையில் 11 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தமது மருத்துவ சேவைகளைப் பெற்று வருகின்றனர். இதற்கு இந்த வைத்தியசாலை நல்ல நிலையில் காணப்பட்டதாகவும், மேற்படி வைத்தியர் இந்த வைத்தியசாலையில் கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் வைத்தியசாலை பாரிய அளவில் வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனால் வைத்திய சேவைகளை நம்பி நாளாந்தம் வரும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் என்றும் பொறுப்பற்ற முறையில் கடமைபுரியம் குறித்த வைத்தியரை உடனடியாக இடமாற்றம் செய்துவிட்டு பொறுத்தமான ஒருவரை நியமிக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். 

குறித்த வைத்தியரை இடமாற்றி விட்டு, பொருத்தமான ஒரு வைத்தியரை நியமிக்குமாறு புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு ஊரிலுள்ள முக்கியஸ்தர்கள் பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்த போதிலும் குறித்த வைத்தியர் இடமாற்றம் செய்யப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமது விசனத்தை தெரிவித்தனர்.

இதன்போது அங்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், அங்கு ஒன்றுகூடியிருந்த மக்களுடன் கலந்துரையாடினார். 

அத்துடன், சம்பவம் தொடர்பில் உரிய சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் வைத்தியர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.


மேலும், பொதுமக்களின் நலன் கருதி குறித்த வைத்தியரை உடனடியாக இடமாற்றம் செய்துவிட்டு, புதிய வைத்தியர் ஒருவைர நியமிக்குமாறும் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், குறித்த வைத்தியரை உடனடியாக இடமாற்றம் செய்வதாக சுகாதார அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினரிடம் அளித்த வாக்குறுதியை அடுத்து, குறித்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து அமைதியாக களைந்து சென்றனர்.

இதேவேளை, கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலையின் அபிவிருத்தி மற்றும் தற்போது கடமைபுரியும் வைத்தியர் தொடர்பான பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றும் நேற்று வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் முந்தல் பிரதேச செயலாளர் எம்.ஏ.ஐ.எச்.பெரேரா , உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.பி.டபிள்யூ.ரி.எம்.எஸ்.பி.மல்வில, தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் உட்பட சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




Post a Comment

Previous Post Next Post