ரஸீன் ரஸ்மின்
கற்பிட்டி - ஆணவாசல் களப்பு பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த ஒருதொகை பூச்சிக் கொல்லிகளுடன் சந்தேக நபர்கள் மூவர் நேற்று முன்தினம் (2) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய நிறுவன கடற்படையினர் கற்பிட்டி - ஆணவாசல் களப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொறியொன்றை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 32 உரப்பைகளில் பொதிச் செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பூச்சிக்கொல்லிகளை ஏற்றிச் சென்ற லொறியையும் கடற்படையின் தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்தனர்.
இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் சந்தேக நபர்கள் மூவருடன் லொறியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.
