முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜிதில் (மர்கஸ்) அஷ்ஷெய்க் அல்காரி ஸமீல் (ஷரபி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற நூருல் குர்ஆன் பகுதி நேர மத்ரஸாவில் அல்குர்ஆன் மனனப் பிரிவில் இணைந்து குர்ஆனை மனனம் செய்த கீரியங்கள்ளி பகுதியைச் சேர்ந்த கண்பார்வையற்ற சகோதரர் முஹம்மது ராபிக் முஹம்மது ஷிபான் இன்று (18) சான்றிதழ் வழங்கி கொளரவிக்கப்பட்டார்.
இன்று வெள்ளிக்கிழமை புதுக்குடியிருப்பில் முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜிதில் (மர்கஸ்) ஜும்ஆத் தொழுகையை தொடர்ந்து நடைபெற்ற சான்றிதழ் வழங்குதல் நிகழ்வில் புத்தளம் மன்பஉஸ் ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் அல்ஹாபில், அல்காரி ஏ.எம்.எம். றியாஸ் (தேவ்பந்தி) சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதுடன், உலமாக்கள், கல்விமான்கள், மஹல்லாவாசிகள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, அல்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த கண்பார்வையற்ற சகோதரர் முஹம்மது ராபிக் முஹம்மது ஷிபான் அவர்களுக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புளிச்சாக்குளம் பிராந்திய கிளை சார்பிலும், புதுக்குடியிருப்பு அஸ்ஸபா பௌன்டேஷன் மற்றும் சிதார் உரிமையாளர் சகோதரர் மர்ஸுன் ஆகியோரால் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டதுடன், புத்தளம் மன்பஉஸ் ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் அல்ஹாபில், அல்காரி ஏ.எம்.எம். றியாஸ் (தேவ்பந்தி) அவர்களால் பொன்னாடை போர்த்தியும், நிகழ்வில் பங்கேற்ற சகல உலமாக்களும் இணைந்து அவருக்கான ஹிப்ழ் சான்றிதழையும் வழங்கி கௌரவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
என்.எம்.ஹபீல் (கபூரி) JP
புதுக்குடியிருப்பு - புளிச்சாக்குளம்.