புத்தளத்தில் கூட்டணி அமைக்க தயார்; மரமும் - மயிலும் பேச்சளவில் இணக்கம்...


ரஸீன் ரஸ்மின்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (மயில்) மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (மரம்) ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டணியாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறியக் கூடியதாக உள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளத்தில் இரண்டு கட்சிகளும் வெவ்வேறாக பிரிந்து போட்டியிடுவது ஆரோக்கியமானது அல்ல எனவும் காலத்தின் தேவை கருதி இரண்டு கட்சிகளும் ஒன்றினைந்து ஒரு கூட்டணியாக போட்டியிட வேண்டும் எனவும் இரண்டு கட்சிகளின் சில முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் மரம் , மயில் கட்சித் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இதேவேளை, ஒரு கூட்டணியாக களமிறங்கும் பட்சத்தில் கட்சி, சின்னம் தொடர்பிலும் இரண்டு கட்சிகள் சார்பிலும் ஆராயப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

எனினும் , கற்பிட்டி பிரதேச சபைக்கு மயில் சின்னத்திலும், புத்தளம் மாநகர சபைக்கு மரச் சின்னத்திலும், புத்தளம் மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய பிரதேச சபைகளுக்கு மயில் சின்னத்திலும் போட்டியிடுவது என்ற ஒரு நிலைப்பாட்டில் மக்கள் காங்கிரஸ் தரப்பினர் உள்ள போதிலும் இதுதொடர்பில் கட்சித் தலைவர்கள் பேசி முடிவெடுப்பார்கள் எனவும் இதுபற்றி இரண்டு கட்சித் தலைவர்களும் கொழும்பில் சந்தித்து புத்தளத்தில் கூட்டணி அமைப்பது சம்பந்தமாக  கலந்துரையாடுவார்கள் என மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவர் RJS தமிழ் செய்திக்கு தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post