ரஸீன் ரஸ்மின்
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐந்து தேர்தல் தொகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 2 இலட்சத்து 39 ஆயிரத்து 576 வாக்குகளைப் பெற்று போனஸ் ஆசனத்துடன் 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி இந்த தேர்தலில் 65 ஆயிரத்து 679 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன், இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்தார்.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட சந்தன அபேரத்ன 113,334 விருப்பு வலாக்குளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், அஜித் கிஹான் 58,183 விருப்பு வாக்குகளையும், கயான் ஜானக 51,233 விருப்பு வாக்குகளையும், ஹிருனி விஜேசிங்க 44,057 விருப்பு வாக்குகளையும், அன்டன் ஜயகொடி 43,907 விருப்பு வாக்குகளையும், முஹம்மட் பைசல் 42,939 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
ஆத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ஹெக்டர் அப்புஹாமி 25,755 விருப்பு வாக்குகளையும், சித்ரால் பெர்னான்டோ 18,916 விருப்பு வாக்குகளையும் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இம்முறை 24 அரசியல் கட்சிகள் மற்றும் 18 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 429 பேர் போட்டியிட்டனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தை பொதுஜன பெரமுன கைப்பற்றியிருந்தது. எனினும், இந்த முறை தேசிய மக்கள் சக்தி புத்தளம் மாவட்டத்தை கைப்பற்றியுள்ளமை வரலாற்று சாதனையாகும்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 5 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் , முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு (தராசு கூட்டணி) ஒரு ஆசனத்தையும் கைப்பற்றிநிருந்தது.
இதில் பொதுஜன பெரமுன சார்பில் சனத் நிசாந்த பெரேரா, பியங்கர ஜயரத்ன, அசோக பியந்த, சிந்தக அமல் மாயாதுன்ன, பியங்கர ஜயரத்ன ஆகியோரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஹெக்டர் அப்புஹாமி, நிரோசன் பெரேரா ஆகியோரும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு சார்பில் அலிசப்ரி ரஹீம் ஆகியோரும் தெரிவாகியிருத்தனர்.
இதேவேளை, பொதுஜன பெரமுன சார்பில் வெற்றிபெற்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா விபத்தொன்றில் மரணமானதை அடுத்து, விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்த ஜெஹத் பியங்கர பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
இந்த நிலையில் , கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பியங்கர ஜயரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிரோசன் பெரேரா ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அருந்திக்க பெர்னான்டோ, அசோக பியந்த, சிந்த அமல் மாயாதுன்ன, ஜெஹத் பியங்கர ஆகியோர் இந்த முறை புதிய ஜனநாயக முன்னணியில் (கேஸ் சிலிண்டர்) போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளனர்.
அத்துடன், ஐக்கிய தேசிய கூட்டமைப்பு (தராசு) சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளார்.
இந்த முறை புத்தளம் மாவட்டத்தில் இருந்து தெரிவான 8 பாராளுமன்ற உறுப்பினர்களில் 7 பேர் புதியவர்கள் என்பதும் இதில் ஒருவர் முஸ்லிம் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.