ரஸீன் ரஸ்மின்
நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்தாஹிர் 2079 வாக்குகளால் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.
இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி புத்தளம் மாவட்டத்தில் 65679 வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. இதில் , நாத்தாண்டிய தேர்தல் தொகுதியில் 7360 வாக்குகளையும், சிலாபம் தேர்தல் தொகுதியில் 11604 வாக்குகளையும், ஆனமடுவ தேர்தல் தொகுதியில் 11710 வாக்குகளையும், புத்தளம் தேர்தல் தொகுதியில் 23512 வாக்குகளையும், வென்னப்புவ தேர்தல் தொகுதியில் 9832 வாக்குகளையும் பெற்றுக் கொண்டன.
புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் தேர்தல் தொகுதியிலேயே ஐக்கிய மக்கள் சக்தி அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்திக்கு இம்முறை இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன.
இதில், முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி 25,755 விருப்பு வாக்குகளைப் பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
மேலும், இரண்டாவது ஆசனத்திற்கு அந்தக் கட்சியில் போட்டியிட்ட வேட்பாளரான சித்ரால் பர்னான்டோவுக்கும், மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான என்.டி.எம்.தாஹிருக்கும் கடும் போட்டி நிலவியது.
எனினும், சித்ரால் பெர்னான்டோ 18,916 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள அதேவேளை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்தாஹிர் 16837 விருப்பு வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எச்.முஹம்மத் 10021 விருப்பு வாக்குகளையும், எஸ்.எச்.எம்.நியாஸ் 10393 விருப்பு வாக்குகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.