புத்தளத்தில் 59.65 வீதம் வாக்குப் பதிவு!

ரஸீன் ரஸ்மின், எம்.ஏ.ஏ.காசிம்

புத்தளம் மாவட்டத்தில் 59.65 வீதமான வாக்களிப்பு பதிவாகியுள்ளதாக  மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எச்.எம்.எஸ்.பீ.ஹேரத் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் 08 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 429 பேர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டதுடன், 6 இலட்சத்தி 63 ஆயிரத்தி 673 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

இம்முறை பொதுத் தேர்தலில் 24 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், 15 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 39 கட்சிகள் போட்டியிட்டன.

மாவட்டத்தில் புத்தளம், ஆனமடு, சிலாபம், வென்னப்புவ மற்றும் நாத்தாண்டிய ஆகிய தேர்தல் தொகுதிகளில் 470 வாக்களிப்ப நிலையங்களில் மக்கள் ஆர்வமாக வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், நடமாடும் பொலிஸ் வாகனங்களும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதேவேளை, இம்முறை புத்தளம் மாவட்;டத்தில் எவ்வித தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை எனவும், அமைதியான தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச அதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எச்.எம்.எஸ்.பீ.ஹேரத் தெரிவித்தார்.



Post a Comment

Previous Post Next Post