சாஹிப் |
இலங்கை நாடு பொருளாதாரத்தில் எழுச்சியை காணவேண்டும் என்றால் ரணில் விக்ரமசிங்க, மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த நாடு தேவையில்லை, ஆனால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் நிச்சயமாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வரவேண்டும் எனவும் கூறினார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளத்தில் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை (30) இரவு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
புத்தளம் - கொழும்பு முகத்திடலில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், முஷாரப் முதுநபீன் மற்றும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உட்பட ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மேலும் குறிப்பிடுகையில்,
முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது, அப்போது அரசுக்கு ஆதரவு வழங்கிய நாம் பல பேச்சுவார்த்தைகளை நடத்தி உடனடியாக ஜனாஸா எரிப்பதனை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால், அன்று எதிர்க்கட்சியில் இருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை வைத்து அரசியலை நடத்திக்கொண்டிருந்தார்கள்.
ஜனாஸா எரிப்பதனை நிறுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட சில இரகசியமான விடயங்களை எதிர்க்கட்சியிலிருந்த முஸ்லிம் எம்.பிக்கள் வேண்டும் என்றே வெளிப்படுத்தினார்கள். ஜனாஸா எரிப்பதனை நிறுத்திவிட்டால் அவர்களுக்கு அரசியல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதால் அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டார்கள். இதுவே, ஜனாஸா எரிப்பதனை நிறுத்துவதற்கு மேலும் சில காலம் எடுத்தது.
இவ்வாறானவர்கள் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மீது இரக்கமில்லாதவர்கள். இறைவனை முன்னிறுத்தி பொய்யான சத்தியமிட்டு மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஒரு சிறுபிள்ளைகளின் குட்டாஞ்சோறு விளையாட்டு அல்ல. எங்களது பிள்ளைகளின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலம் இதில் உள்ளது.
மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். புதிய ஒருவருக்கு கொடுத்துப் பார்ப்போம் என்று உங்களது வாக்கினை பாலாக்கி விடாதீர்கள்.
அன்று இந்த நாடு இருந்த நிலைமையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். இந்த நாடு கஷ்டத்தில் இருந்த போது நாட்டைப் பொறுப்பெடுக்க முடியாதவர்கள் இன்று நாட்டை தாருங்கள் என்று கேட்பது வேடிக்கையாகும்.
தான் சார்ந்த கட்சியையும் பார்க்காமல் இந்த நாட்டு மக்கள் மீது இரக்கம் கொண்டதன் காரணமாக ரணில் விக்ரமசிங்க, தனி நபராக வந்து தைரியமாகவும், நம்பிக்கையுடனும் நாட்டை பொறுப்பெடுத்தார்.
வரிசை யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நாட்டு மக்கள் நிம்மதியாக வாழும் ஒரு சூழ்நிலையையும் இன்று உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
அனுபவம் இல்லாதவர்களிடம் இந்த நாட்டை ஒப்படைத்து நாம் பட்ட கஷ்டங்கள் மக்களுக்கு நன்கு தெரியும். இதற்கு கோட்டபாய ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன நல்லதொரு உதாரணமாகும்.
அதுபோலதான் இப்போது வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளவர்களில் அரசியலில் நன்கு முதிர்ச்சியடைந்தவர்தான் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அவர் பல தடவைகள் இந்த நாட்டின் பிரதமராக பதவி வகித்திருக்கிறார். ஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நல்ல திட்டங்கள் இருக்கிறது. பொருளாதாரத்தில் எழுச்சியை ஏற்படுத்த அவர் காத்திருக்கிறார். ஜனாதிபதி ரணிலுக்கு நாடு முக்கியல்ல. இந்த நாட்டுக்கு , நாட்டு மக்களுக்கு அவர் முக்கியம்.
எனவே, அனுபவமில்லாதவர்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு கைதேசப்படாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.