ரிஷாத் பதியுதீன் சஜிதை விட ரணில் விக்ரமசிங்கவைதான் அதிகம் நேசிக்கிறார் - முஷாரப் எம்.பி. புத்தளத்தில் தெரிவிப்பு..!

ரிபாக் |

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையே  ஆதரிப்பது என்ற தீர்மானத்தில் இறுதிவரை இருந்தார் எனத் தெரிவித்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன், கட்சியின் தவிசாளர் எடுத்த முடிவின் காரணமாகவே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார் எனவும் கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளத்தில் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை (30) இரவு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

புத்தளம் - கொழும்பு முகத்திடலில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், முஷாரப் முதுநபீன் மற்றும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உட்பட ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன்  மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் இனவாதிகள், மதவாதிகள், திருடர்கள் இருப்பதாகவும், அதற்காகதான் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் இனவாதத்திற்கு அடித்தளமிட்டவர்கள், ஜனாஸா எரிப்புக்கு பிரதான காணரமான வைத்தியர்களும் சஜித் அணியில்தான் இருக்கிறார்கள். சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்காகவே இவ்வாறு இனவாத, மதவாத மற்றும் ஜனாஸா எரிப்பு என்று நாடகமாடுகிறார்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் ரணில் விக்ரமசிங்கவோடு பயணிப்பதற்குதான் விருப்பத்துடன் இருந்தார்

ஆனால், கட்சிக்குள் இருக்கும் ஒருசிலரை திருப்த்திப்படுத்த அவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்சித் தலைவர் கட்டுப்பட்டு ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் மக்களிடம் கருத்துக் கேட்பதாக ஒரு நாடகத்தை நடத்திவிட்டு இறுதியில் எல்லோரும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்ததால் தமது கட்சி சஜிதுக்கு ஆதரவு என்று கூறியிருக்கிறார்.

முடிவை அறிவிக்கும் இறுதி வரை ரணில் விக்ரமசிங்கவோடு பயணித்த மக்கள் காங்கிரஸ் தலைவர், உங்களுக்குதான் ஆதரவு வழங்குவோம் என்று ரணில் விக்ரமசிங்கவை நம்பவைத்து இறுதி வரை கூறிவந்த அவர், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கி, ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்தார்.

சுயமாக சிந்திக்கத் தெரியாத ஆளுமையற்ற பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை ஒரு தலைவராக ஏற்றுக்கொண்டதற்கு மக்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடியில் மக்கள் பட்ட துன்பங்களை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அவ்வாறானதொரு பிரச்சினை இப்போது இல்லை. அன்று ரணில் விக்ரமசிங்க தைரியத்துடன் இந்த நாட்டை பொறுப்பெடுக்காவிட்டிருந்தால் எமது நாடு சோமாலியா , பங்களாதேஸ் போன்ற நாடுகளைப் போல மாறியிருக்கும்.

எனவே, எமக்கு நன்றியுணர்வு இருக்க வேண்டும். இந்த நாட்டை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு ரணில் விக்ரமசிங்க மட்டும்தான் மிகவும் பொருத்தமானவர். வேறு யாராலும் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்றார்.

Post a Comment

Previous Post Next Post