போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து இத்தாலி குடியுரிமை பெற முயற்சித்த இலங்கையர்கள் கைது

 


ரஸீன் ரஸ்மின்

இலங்கையிலுள்ள இத்தாலி தூதரகத்தின் போலி முத்திரையுடன் கூடிய போலியான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து இத்தாலியில் குடியுரிமைக்கு விண்ணப்பித்த இலங்கையர்கள் சிலர், அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு முகவர் நிலையம் ஊடாக போலி ஆவணங்களை தயாரித்து, இலங்கையர்கள் சிலர் இத்தாலிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருவதற்கான விசா விண்ணப்பங்களை பெறுவதற்கும்,  இத்தாலி குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போதும் பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், பொலிஸ் அறிக்கை உள்ளிட்ட பிற சான்றிதழ்களை இலங்கையிலுள்ள இத்தாலி தூதரகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவது இத்தாலியின் வழக்கமான நடைமுறையாகும்.

இத்தாலிக்கு செல்வோர் மேற்படி சான்றிதழ்களை சட்டப்பூர்வமாக பெறுவதற்கு பல சிரமங்களை எதிர்நோக்குவதால் இடைத் தரகர்களையும், முகவர் நிலையங்களையும் நம்பி அதிகளவில் பணத்தை செலவு செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு இத்தாலிக்கு செல்வோரின் பணத்தை பெறும் இடைத்தரகர்களும், முகவர் நிலையங்களும் முறையற்ற விதத்தில் போலி ஆவணங்களை தயாரித்து அவர்களை இத்தாலிக்கு அனுப்பி வைத்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், போலி ஆவணங்களை சமர்ப்பித்து இத்தாலிக்கு சென்ற நிலையில் அங்கு கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு எதிராக இத்தாலி நாட்டின் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வென்னப்புவ பகுதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றின் ஊடாகவே தாம் விண்ணப்பித்ததாகவும், தமது ஆவணங்களை ஒப்படைத்ததாகவும், அவர்களே தங்களுக்கு இவ்வாறு போலியான ஆவணங்களை தயாரித்து, இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தின் போலி முத்திரைகளை வைத்து, அதற்கான சான்றிதழ்களையும் தயாரித்து தந்துள்ளதாகவும் இத்தாலியில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post