ரஸீன் ரஸ்மின்
புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் நலன்புரி சங்கத்தின் புதிய நிர்வாக குழுத் தலைவராக புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான ரனீஸ் பதுர்தீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று (23) இடம்பெற்றது.
குறித்த சங்கத்தின் பொதுக் குழுவினால் , சங்கத்தின் கட்டிடத்தில் நடத்தப்பட்ட இந்த தேர்தலில் தலைவர், உப தலைவர், செயலாளர், உப செயலாளர், பொருளாளர் உட்பட உறுப்பினர்கள் ஆறு பேர் வாக்கெடுப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதன்போது தலைவர் பதவிக்காக ரனீஸ் பதுர்தீனும் , சங்கத்தின் பதில் தலைவராக பதவி வகித்த சம்சீர் ராஜூம் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 532 வாக்குகள் அளிக்கப்பட்டன.
இதில் புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ரனீஸ் பதுர்தீன் 318 வாக்குகளையும் அவரோடு சேர்ந்து போட்டியிட்ட முன்னாள் பதில் தலைவரான சம்சீர் ராஜூ 208 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.இதில் 6 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
அத்துடன், புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் நலன்புரி சங்கத்தின் புதிய நிர்வாக குழுத் உபதலைவராக ஏ.என்.ஏ.ஏ. அலி இத்தாப், செயலாளராக எம்.ரிஸ்வான், உதவி செயலாளராக எம்.ஏ.எம்.ஜலீல், பொருளாளராக எம்.ஏ.ஏ.பாயிஸ் ஆகியோரும் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.
இதேவேளை, உறுப்பினர்கள் பதவிக்காக ஏழு பேர் போட்டியிட்டதுடன், அதில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற ஏ.பி.எம்.ஜவ்பர், ஏ.சி.கலீல் ரஹ்மான், ஏ.எல். ரிஸ்வான், எம்.ஏ.எம். சாகீர், எம்.என்.எம். நிஸ்பாக், எம்.எஸ்.எம். ஆதில் ஆகிய ஆறு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
