மின்சாரம் தாக்கி இளம் பெண் உயிரிழப்பு; மதுரங்குளியில் சோகம்...!

ரஸீன் ரஸ்மின்

மதுரங்குளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ரெட்பானா - புழுதிவயல் பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று நண்பகல் 11.30 மணிக்கும் 12 மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாலாவி - புழுதிவயல், ரெட்பானா பகுதியைச் சேர்ந்த குப்பை மரிக்கார் பாத்திமா சாபிகுனா (வயது 38) எனும் ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டில் மின்சார தேவைக்காக மின் வயரை எடுத்து கையாளுகையிலேயே இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளான குறித்த இளம் பெண்ணை, அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், மரண விசாரணையை நடத்தினார்.

அத்துடன், இன்று மாலை உயிரிழந்த இளம் பெண்ணின் ஜனாஸா மீதான பிரேத பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டது.

மின்சாரம் தாக்கியமையால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கி ஜனாஸா குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post