ரஸீன் ரஸ்மின்
புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கியுல பகுதியிலுள்ள தென்னந்தோட்டத்தில் தேங்கி நிற்கும் வெள்ள நீருக்குள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மதுரங்குளி , வேலாசிய பகுதியைச் சேர்ந்த ஹேரத் முதியன்சேலாகே பந்துல ஹேரத் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கியுல பகுதியில் உள்ள தனியார் நபர் ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தில் வெள்ளநீர் தேங்கியிருக்கும் பகுதியில் சடலமொன்று கிடப்பதாக அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு, விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அத்துடன், அங்கு வருகை தந்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மரண விசாரணையை முன்னெடுத்ததுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாரிக்கு உத்தரவிட்டார்.
உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
