ரிபாக், எம்.ஏ.ஏ.காசிம்
புத்தளம் - உடப்பு களப்பில் இருந்து மீனவர் ஒருவரின் சடலமொன்று நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல் பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்துளுஓயா, புளிச்சாக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் நேற்று வெள்ளிக்கிழமை (03) மாலை 6 மணியளவில் உடப்புக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
இவ்வாறு வீட்டைவிட்டு வெளியேறிய குறித்த மீனவர் சனிக்கிழமை (04) வரை வீடு திரும்பவில்லை எனவும், இதுதொடர்பில் குடும்பத்தினர் முந்தல் பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு உடப்பு களப்பு பகுதியில் சடலமொன்று கிடப்பதை அவதானித்த சிலர் அதுபற்றி உடப்பு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த உடப்பு பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, சடலமாக மீட்கப்பட்டவர் வெள்ளிக்கிழமை வீட்டைவிட்டு வெளியேறி உடப்புக்கு சென்ற புளிச்சாக்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர் என்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர், ஸ்தலத்திற்கு விஜயம் செய்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரனை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் ஸ்தல விசாரனைகளை முன்னெடுத்தார்.
அதனையடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் மற்றும் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
