கால்வாய்க்குள் வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு; மதுரங்குளியில் சோகம்...!

சாஹிப் அஹ்மட்

புத்தளம் - மதுரங்குளியில் கால்வாயக்குள் வீழ்ந்த ஒரு வயது பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பன திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.

குழந்தையின் வீட்டுக்கு அருகிலுள்ள கால்வாய்க்குள் வீழ்ந்தே குழந்தை உயிரிழந்துள்ளது.

இன்று பிற்பகல் குழந்தையின் தாய் மற்றும் அம்மம்மா ஆகியோர் வீட்டு வளவை துப்புரவு செய்துகொண்டிருந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த குழந்தை வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமது வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டில் சேகரித்த குப்பைகளை கொட்டுவதற்காக கால்வாய்க்கு அருகே வந்த போதே குழந்தை நீரில் மிதந்துகொண்டிருப்பதை தாய் அவதானித்துள்ளார்.

இதனையடுத்து, அயலவர்களின் உதவியுடன் அந்த குழந்தையை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், அந்தக் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர், நீரில் மூழ்கியதில் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளது எனத் தீர்ப்பு வழங்கி சடலத்தை பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பன திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post