ரிபாக்
மாராவில், முஹூதுகட்டுவ பிரதேசத்தில் கடலுக்குச் சென்று காணாமல் போயிருந்த ஜப்பானிய பிரஜை உட்பட நான்கு பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மாராவில், முஹூதுகட்டுவ பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் நேற்று (18) மாலை காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன படகின் உரிமையாளரான மாராவில் - வடக்கு முதுகட்டுவைச் சேர்ந்த ஸ்ரீயானி ஜீவனி பெர்னாண்டோ மாரவில் பொலிஸாருக்கு இது குறித்து அறிவித்துள்ளார்.
மீன் பிடிக்கும்போது திடீரென பெய்த மழையுடன் படகு கடலில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
படகை ஓட்டிச் சென்றவர்கள் இது குறித்து கரையில் இருந்த மற்றொரு மீனவருக்கு தொலைபேசி செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி படகு கவிழ்ந்ததாக கூறப்படும் பகுதிக்கு சென்ற மற்றொரு குழுவினர் படகை ஓட்டி சென்றவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
எனினும் படகில் இருந்த ஏனைய நான்கு பேரும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டாளர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கடற்படையினரின் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக மாராவில் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையிலேயே, படகில் இருந்த நான்கு பேரும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாராவில் மற்றும் தொடுவா பிரதேசங்களை சேர்ந்த சிலவரும் ஜப்பானிய பிரஜை ஒருவருமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
