பலநோக்கு கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு முட்டையுடன் வந்த மொட்டு அணி...!

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - ஆனமடுவ பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய பணிப்பாளர் சபை தெரிவு செய்வதற்காக நேற்று (24) இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய குழு கூடுதலான வாக்குகளைப் பெற்று மீண்டும் தனது அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.

ஆனமடுவ பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அடுத்த 03 வருடங்களுக்கான பணிப்பாளர் சபைத் தெரிவுக்கான வாக்களிப்பு நேற்று (24) ஆனமடுவ பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, ஆனமடுவ பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் இந்த வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் குழுக்கள் போட்டியிட்டிருந்தன.

இதன்போது, பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற பொதுஜன பெரமுன குழு மீண்டும் தனது அதிகாரத்தை உறுப்படுத்தியது.

குறித்த தேர்தல் இடம்பெற்ற பின்னர் வெற்றி பெற்ற அணியினர், அங்கு வாக்களிக்க வருகை தந்த தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியினர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்த முற்பட்டதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

எனினும், அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.



Post a Comment

Previous Post Next Post