எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் லெஜெண்ட்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் விஷேட கலந்துரையாடல் ஒன்று புத்தளம் ரையான் மஹாலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புத்தளம் உதைபந்தாட்ட லீக் தலைவரும், முன்னாள் புத்தளம் நகர சபை தலைவருமான எம்.எஸ்.எம் ரபீக், லீக் செயலாளர் ஜதா ஜௌஸி, லீக் பொருளாளர் எம்.எஸ்.எம். ஜிப்ரி, புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிஷாம், புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை 20 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட அணி வீரர்கள் மற்றும் புத்தளம் உதைபந்தாட்ட நடுவர் சங்கத்தின் நடுவர்களும் கலந்து கொண்டனர்.
புத்தளம் லெஜெண்ட்ஸ் கழகத்தின் முகாமையாளர் முஹம்மது யமீன், சுமார் 47,000 ரூபா பெறுமதியான உதைபந்தாட்ட கோல் கம்பத்துக்கான வலை மற்றும் தொடர் கொடி கம்பங்கள் புத்தளம் லீக்கிடம் இதன்போது கையளித்தார்.
அதே நேரம் புத்தளம் விம்பிள்டன் கழகத்தின் முன்னை நாள் வீரரான மர்ஹும் ஜனாப் நினைவாக நடாத்தப்படவுள்ள அணிக்கு 09 பேர் கொண்ட உதைபந்தாட்ட தொடருக்கான பூரண அனுசரணையை லெஜெண்ட்ஸ் கழகம் பொறுப்பேற்றுள்ளதோடு இதற்கான மொத்த பரிசுத் தொகையான 80,000 ரூபா பெறுமதியான காசோலையும் புத்தளம் லீக்கிடம் கையளிக்கப்பட்டது.
மேற்படி கலந்துரையாடலில் புத்தளத்தில் உதைப்பந்தாட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன், பங்குபற்றிய அனைவருக்கும் இராப்போசனமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.