புத்தளம் கரைத்தீவு மு.ம.வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இருமாடி தொழிநுட்பக் கட்டடம் ஆளுநரால் திறந்துவைப்பு

ரிபாக், புத்தளம் நிருபர்

புத்தளம் - கரைத்தீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இருமாடி தொழிநுட்பக் கட்டடம் இன்று (11) வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் ஏ.கே.நயீமுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் உட்பட உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

"அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த இருமாடி தொழிநுட்பக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது.

இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட குறித்த தொழிநுட்பக் கட்டடத்தை வடமேல் மாகாண ஆளுநர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இதன்போது புத்தளத்தில் மிகவும் பழமைவாய்ந்த கிராமமான கரைத்தீவு (பொன்பரப்பி) முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிப்பதற்காக விளையாட்டு மைதானத்தை செப்பனிடுவதற்காக வனாத்தவில்லு பிரதேச சபை, புத்தளம் நகர சபை ஆகியவற்றின் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதாக இங்கு குறிப்பிட்டார்.

மேலும் , மைதானத்தை செப்பனிடுவதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கான எரிபொருள் செலவுகளை பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பொறுப்பெடுத்துள்ளார் எனவும் கூறினார்.

அத்தோடு, தற்போது பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மற்றுமொரு கட்டிடத்தையும் முழுமைப்படுத்தித் தருவதாகவும் இதன்போது உறுதியளித்தார்.

மேலும், புதிதாக திறக்கப்பட்ட தொழில்நுட்ப கட்டடத்திற்கான தளபாடங்களை முழுமையாக பெற்றுக்கொடுப்பதாகவும் தனது உரையின் போது வடமேல் மாகாண ஆளுநர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் குறிப்பிட்டார்.



Post a Comment

Previous Post Next Post