ரிபாக்
கற்பிட்டி - அல் அக்ஷா தேசியப் பாடசாலை மாணவர்கள் இருவர் தமிழ் வாசிப்பு மற்றும் சிங்களம் பேச்சுப் போட்டிகளில் மாகாண மட்டத்தில் முதலிடங்களைப் பெற்று, தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
அகில இலங்கை தமிழ் தின மற்றும் சிங்களப் போட்டி நிகழ்ச்சிகள் குருநாகல், வாரியாபொல கல்வி அபிவிருத்தி மத்திய நிலையத்தில் இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சியின் போதே குறித்த மாணவர்கள் இருவரும் முதலிடங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இதன்படி, இரண்டாம் மொழி சிங்கள பேச்சுப்போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி எம்.நசீம் ஆயிஷா மனால் மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று, தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.
தமிழை தாய் மொழியாக கொண்ட மாணவி சிங்கள பேச்சுப் போட்டியில் இவ்வாறானதொரு சாதனையை நிலைநாட்டியமை பாடசாலைக்கும் கற்பிட்டி பிரதேசத்திற்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி, பேச்சுப் போட்டியில் மாவட்டம் மற்றும் மாகாண மட்டப் போட்டிகளில் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகுவதற்கு ஒத்துழைத்த பாடசாலையின் அதிபர், பயிற்றுவித்த சிங்களப்பாட ஆசிரியை பவானி, இணைப்பாளர் ஆசிரியை CSMF பரீன் இல்ஹாம் ஆகியோருக்கு மாணவியின் பெற்றோர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மாகாண மட்டத்தில் இடம்பெற்ற தமிழ் வாசிப்பு போட்டி பிரிவு 2 இல், ஐ.எம். இனான் எனும் 7 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனும், முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி, இரண்டு மாணவர்களுக்கும் கற்பிட்டி அல் அக்ஷா தேசியப் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட கற்பிட்டி வாழ் மக்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
படம்: ரிஸ்வி ஹூஸைன்
