கற்பிட்டியில் 288 Kg பீடி இலைகள் மீட்பு; ஒருவர் கைது...!

சாஹிப்

கற்பிட்டி - கீரிமுந்தல் கடற்பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து 288 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரும், கற்பிட்டி பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கீரிமுந்தல் கடற்பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த வீட்டில் 9 உரைப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 288 கிலோ கிராம் நிறையுள்ள பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பீடி இலைகள், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு, இலங்கையின் பல இடங்களுக்கு விநியோகிக்கும் நோக்கில் இவ்வாறு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 48 வயதுடையவர் எனவும் இவர் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post