புத்தளத்தில் மாபெரும் நோன்புப் பெருநாள் விழா

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் தலைமையில் மாபெரும் நோன்புப் பெருநாள் விழாக்களை நடத்துவதற்கான திட்டமிடல் கூட்டம் புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

பிரதே செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், முப்படைகளின் பிரதானிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், புத்தளம் உப்பு நலன் புரிச்சங்க உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

புத்தளம் மாவட்ட செயலாளரினால் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பெருநாள் விழா தொடர்பான திட்டத்தையும் முன்வைத்தார்.

இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமியர்களின் பெருநாளைத் தொடந்து நடத்தப்படும் விழாக்களில் பௌத்த, கத்தோலிக்க மற்றும் இந்து சமயங்களைப் பின்பற்றும் மக்கள் இன மத பேதமின்றி பங்குபற்றி வந்தனர்.

விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த நிலை மாற்றமடையத் தொடங்கியது.

எனவே புத்தளம் மாவட்டத்தில் சகல மதத்தவர்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழ்கின்றமையால் சகோதர மதத்தவர்களின் பாரம்பரியங்களை அறிந்திருப்பதுடன் அதற்கு மதிப்பளிக்கவும் வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விளக்கமளித்தார்.

அந்த வகையில் எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு மாபெரும் பெருநாள் விழா நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

புத்தளம், கல்பிட்டி மதுரன்குளி நகரங்கள் அலங்கரிக்கப்பட்டு பாரம்பரிய மற்றும் நவீன விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

புத்தளம் பிரதேசத்தின் விளையாட்டு நிகழ்ச்சிகள் புத்தளத்திலும் கல்பிட்டி பிரதேசத்தின் விளையாட்டு நிகழ்ச்சிகள் நுரைச்சோலையிலும் மதுரன்குளி பிரதேசத்தின் விளையாட்டு நிகழ்ச்சிகள் கடையாமோட்டை பகுதியிலும் நடத்தப்படவுள்ளது. 

இந்த பெருநாள் விழா அரச நிறுவனங்கள், பொலிஸ் மற்றும் முப்படைகளின் பூரண அனுசரணையுடன் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.









Post a Comment

Previous Post Next Post