ரஸீன் ரஸ்மின்
புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு ( நோன்பை முடித்தல்) நேற்று புதன்கிழமை (5) மாலை புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரி சம்மேளனத்தின் தலைவர் வை.எம்.நிஸ்தார் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், முன்னாள் புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக், புத்தளம் மாவட்ட செயலாளர் எஸ்.எச்.எம்.பி.ஹேரத், உட்பட பொலிஸ் , இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை புத்தளம் பொறுப்பதிகாரிகள், சர்வ மதத் தலைவர்கள், அரச அலுவலகங்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், உயரதிகாரிகள், உலமாக்கள், புத்தளம் வர்த்தகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த இப்தார் நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, முஸ்லிம் மக்களால் அனுஷ்டிக்கப்படுகின்ற புனித நோன்பின் முக்கியத்துவம் பற்றியும், மத நல்லிணக்கம் தொடர்பிலும் சர்வ மதத் தலைவர்களால் உரைகளும் நிகழ்த்தப்பட்டன.
மேற்படி நிகழ்வுகளை சிங்கள மொழியில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நிறைவேற்றுப் பேரவை உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான தோழர் ஹிஷாம் ஹுஸைன் தொகுத்து வழங்கினார்.
இந்த நல்லிணக்க இப்தார் நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் ஏற்பாட்டாளர்களால் அன்பளிப்பு பொருட்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.