- சாஹிப் -
முந்தல் பிரதேச செயலக கிராமிய, பொருளாதார ஊக்குவிப்பு மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான மீளாய்வு கூட்டம் இன்று முந்தல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
முந்தல் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.பி.டபிள்யூ. ரி.எம்.எஸ்.பி. மல்வில தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பியந்த உட்பட அமைச்சின் உள்நாட்டு அலுவல்கள் பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக, அமைச்சின் அபிவிருத்தி பிரிவின் மேலதிக செயலாளர் எம்.ஏ.பி.பி.வன்னிநாயக்க, அமைச்சின் விசாரணைப் பிரிவின் மேலதிக செயலாளர் தம்மிக முதுகல, புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத், மாவட்ட மேலதிக செயலாளர் ரவிந்ரு விக்ரமசிங்க, முந்தல் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் முஹம்மது அஸ்மில் உட்பட அரச திணைக்கள தலைவர்கள், வெளிக்கள அரச உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 31 கிராமங்களில் உள்ள மக்களின் வருமானத்தை உயர்த்துதல், ஏற்றுமதி வருமானத்தை மேலும் அதிகரித்தல் , பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
தொழில் முயற்சி இனங்காணுதலும், ஊக்குவித்தலும், பாடசாலை செல்லாத மாணவர்களை இனங்கண்டு அம்மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பி வைப்பது, போதைப் பாவனைக்கு அடிமையானவர்களை சமூக மயப்படுத்துவது, போஷாக்கு குறைவான பிள்ளைகளுக்கு சத்துணவுகளை வழங்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
படங்கள்: ஷான், ஆர்.ரஸ்மின்