புத்தளம் 20
திருட்டுக் கும்பலின் கைகளில் சிக்கிக்கொண்டிருக்கின்ற இந்த நாட்டை பாதுகாப்பதற்கு மக்கள் முன்வர வேண்டும் என வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், மு.காவின் கற்பிட்டி பிரதேச அமைப்பாளருமான எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மு.காவின் புத்தளம் மாவட்ட நிலைப்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
புத்தளம் நகர சபையை மூன்று முறைக்கு மேல் எமது கட்சி நகர சபையை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. ஆகவே, இம்முறை புத்தளம் நகர சபை மாநகர சபையாக மாற்றம் பெற்றிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் புத்தளம் மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிகூடிய ஆசனங்களுடன் கைப்பற்றும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கான சகல வியூகங்களும் எமது கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் முன்னெடுத்துள்ளோம். ஆந்த அடிப்படையில்தான் புத்தளம் நகர சபையில் தனித்து எமது மரச்சின்னத்தில் களமிறங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.
புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் எமது கட்சி மரச் சின்னத்தில் தனித்தும் ஏனைய சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து போட்டியிடுகிறோம்.
குறிப்பிடப்பட்டது போல உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி இன்று எல்லோரினதும் உள்ளத்தில் எழுகிறது.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் சிலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என்று கடும் உத்தரவும் போடப்பட்டது. தேர்தலை நடத்த பணமில்லை என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு தேர்தலை தடுத்து நிறுத்துவதற்கு அல்லது பிற்போடுவதற்கு பல முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நாடு ஒரு திருட்டுக் கும்பலின் கையில் சிக்கிக்கொண்டிருக்கிறது. இதனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நாட்டு மக்களுக்கு உள்ளது.
இது ஒரு சிறிய தேர்தலாக இருந்தாலும், ஆட்சி மாற்றத்தை வேண்டி நிற்கிற ஒரு தேர்தலாக காணப்படுகிறது. இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் எந்த ஆட்சியை, எந்த ஆட்சியாளர்களை விரும்புகிறார்கள் என்று இந்த தேர்தல் மூலம் சர்வதேச மக்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் சொல்ல வேண்டும்.
எனவே, இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மணோ கணேஷனின் கட்சி உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து பயணிக்கின்றன.
எனவே, இந்த நாட்டையும், துன்பங்களை அனுபவிக்கின்ற நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஆரம்ப தளமாக கொண்டு புத்தளம் மக்கள் மாத்திரமின்றி, முழு நாட்டு மக்களும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஜனநாயக ரீதியில் மக்களுடைய வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஒருவரை அதே மக்கள் வீதிக்கு இறங்கி விரட்டியடித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் ஆணையை பெறாது பின் கதவால் வருகை தந்த ஒருவர் மக்களின் விருப்பத்திற்கு மாற்றமான முறையில் ஜனாதிபதி பதவியை எடுத்திருக்கிறார்.
இன்று இந்த நாட்டில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றமையை பல சந்தர்ப்பங்களில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஜனநாயக விரோத செயற்பாடுகள் நாளாந்தம் அதிகரித்து காணப்படுகிறது.
எனவே, இவ்வாறான ஆட்சியாளர்களுக்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
