புத்தளத்தில் புதிய வீட்டுத்திட்டம் திறந்துவைப்பு

புத்தளம் 4ஆம் கட்டையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஹாலித் பஹத் அல் ஜெரி வீட்டுத்திட்டம் இன்று மாலை வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

குவைத் நாட்டைச் சேர்ந்த ஜெரி குடும்பத்தினர் தங்களது பெற்றோர்களது ஞாபகார்த்தமாக குறித்த வீட்டுத்திட்டத்தினை நிர்மாணிப்பதற்கான நிதியுதவியை வழங்கியுள்ளனர்.

மதுரங்குளி மேர்சி லங்கா நிறுவனத்தின் மேற்பார்வையிலும், ரஹ்மா இன்டர்னெஷனல் அமைப்பினரின் அணுசரணையிலும், புத்தளம் பெரிய பள்ளிவாசலின் ஒத்துழைப்பிலும் சகல வசதிகளுடன் கூடிய குறித்த பிரதேசத்தில் சகல வசதிகளுடன் கூடிய 50 விடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.


இந்த வீட்டுத்திட்டத்தை நிர்மாணிப்பதற்காக புத்தளம் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தனக்குச் சொந்தமான காணியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

மேற்படி, புதிய வீட்டுத்திட்டத்தின் திறப்பு விழாவுக்கு குவைத் நாட்டைச் சேர்ந்த தனவந்தர் சலா ஹாலித் பஹத் அல்ஜெரி மற்றும் குடும்பத்தினர்களுடன், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர் பி.எம்.ஏ.ஜனாப், மதுரங்குளி மேர்சி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் முனாஸ், மேர்சி லங்கா கல்வி வளாகத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் பௌசுல் ரஹ்மான் உட்பட உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், குவைத்திலிருந்து வருகை தந்த ஜெரி குடும்பத்தினர் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கியதுடன், இனிப்பு பண்டங்களையும் வழங்கி மகிழ்வித்தனர்.

அத்துடன், குறித்த வீட்டுத்திட்டத்தினை நிர்மாணிப்பதற்கு உதவிபுரிந்தவர்களுக்கு புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

-சாஹிப் அஹ்மட் -













Post a Comment

Previous Post Next Post