ஒரே இலக்கத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள்!

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் வலம் வந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதம்பை நகரில் 11 ஆம் திகதி போக்குவரத்து பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்தி ஆவணங்களைச் சரிபார்த்த  பொலிஸாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரே பதிவு இலக்கத்தைக் கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒரே நேரத்தில் அப்பகுதியில் உலாவிக்கொண்டிருப்பது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் உடனடியாக இரு மோட்டார் சைக்கிள்களையும் சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்தினர்.

அந்த சோதனையின் போது  ஒரு மோட்டார் சைக்கிளில் போலி இலக்கத் தகடு என்பது உறுதியானது. அந்தப் போலி இலக்கத் தகட்டுடன் பைக்கை ஓட்டி வந்த நபர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிலாபம் பிரதேச சபையின் உறுப்பினர் என்பது தெரியவந்தது. 

சிலாபம் – ஜெயபிம பகுதியைச் சேர்ந்த குறித்த மக்கள் பிரதிநிதியை உடனடியாகக் கைது செய்துள்ள மாதம்பை பொலிஸார், போலி இலக்கத் தகடு பயன்படுத்தப்பட்டதன் பின்னணி உள்ளிட்டவை தொடர்பில் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post