முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட சிறைத்தண்டனை!

ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (01) தீர்ப்பளித்துள்ளது.

முதலாவது குற்றச்சாட்டுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும், இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் மேலும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், இரண்டு குற்றச்சாட்டுகளுக்குமான சிறைத்தண்டனைகளையும் ஒரே காலப்பகுதியில் அனுபவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின பேரணியில் கலந்துகொண்ட அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக, அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் கணக்கிலிருந்து பணம் செலுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் அமைச்சர் மீது இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி, அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் கணக்கிலிருந்து மாரவில பகுதியில் அமைந்துள்ள தனியார் கேட்டரிங் நிறுவனமொன்றுக்கு குறித்த உபசரிப்பு நடவடிக்கைகளுக்காக 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த பியங்கர ஜயரத்ன, குறித்த பணத்தை செலுத்துவதற்காக ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியைத் தூண்டியதாகவும் குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் முன்னிலையில் நீண்டகாலமாக இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர், தீர்ப்பு இன்று (01) அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post