புத்தளம் - சமீரகம விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

எம்.ஏ.ஏ.காசிம் - ரஸீன் ரஸ்மின்

புத்தளம், கரம்பை -உடப்பு பிரதான வீதியின் சமீரகம பிரதேசத்தில் நேற்று (29) இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸூம்  மோட்டார் சைக்களிலும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட  விபத்தில் மோட்டார் சைக்கள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளத்தில் இருந்து கரம்பை ஊடாக கொத்தாந்தீவு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து புத்தளம் டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸூம் , பெருக்குவட்டானில் இருந்து மதுரங்குளி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொத்தாந்தீவு பெருக்குவட்டானைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பத்தஸ் ஆவார்.

உயிரிழந்தவரின் ஜனாஸாவை பார்வையிட்ட புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரனை அதிகாரியின் மரண விசாரனையின் பின்னர், ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் ஜனாஸா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விபத்துடன் தொடர்புடைய இ.போ.ச பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post