புத்தளத்தில் வேட்பாளரிடம் 85 வாக்காளர் அட்டைகளை வழங்கிய தபால் ஊழியர் கைது!


ரஸீன் ரஸ்மின்

புத்தளம் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சியொன்றின் பெண் வேட்பாளர் ஒருவருக்கு 85 வாக்காளர் அட்டைகளை வழங்கியதாக கூறப்படும் தபால் ஊழியர் ஒருவர் இன்று (24) வியாழக்கிழமை சந்தேகத்தின் பேரில் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பிரதான தபாலகத்தில் இணைக்கப்பட்ட ரத்மல்யாய பகுதியில் நிரந்தரமாக தபால் விநியோகம் செய்துவரும் தபால் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Piad Add

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கட்சியொன்றின் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவரிடம் ஒருதொகை வாக்காளர் அட்டைகளை குறித்த தபால் ஊழியர் வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, புத்தளம் - ரத்மல்யாய பகுதியில் புத்தளம் உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலக அதிகாரிகளுடன் பொலிஸாரும் இணைந்து நேற்றிரவு (23) விஷேட சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த பெண் வேட்பாளர் வீட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக விநியோகிக்கப்பட்ட 85 வாக்காளர் அட்டைகள் சந்தேக நபரான பெண் வேட்பாளரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சட்டவிரோதமாக வாக்காளர் அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த பெண் வேட்பாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், குறித்த வாக்காளர் அட்டைகள் தொடர்பில் விரிவான விசாரணைகளையும் முன்னெடுத்தனர்.

Paid Add

இதன்போது குறித்த வாக்காளர் அட்டைகள், புத்தளம் பிரதான தபால் நிலையத்தில் கடமையாற்றும் தபால் ஊழியரால் தனக்கு வழங்கப்பட்டதாக கைது செய்யப்பட்ட பெண் வேட்பாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த தபால் ஊழியர் இன்று வியாழக்கிழமை (24) நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post