காஸா மக்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்க பிரார்த்திப்போம் - எம்.என்.எம்.ரினோஸ்

 


நல்லிணக்கத்துடனும் , ஒற்றுமையுடனும் ஒரு புதிய இலங்கையை உருவாக்குவோம் என சமூக சேவையாளரும், பொதுஜன ஐக்கிய முன்னணியின் விருதோடை வட்டார வேட்பாளருமான எம்.என்.எம்.ரினோஸ் தெரிவித்துள்ளார்.

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இத்தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ரமழான் மாதம், நோன்புநோற்று காலத்தை கழிப்பதாக மட்டுமின்றி, ஏனைய சமூகத்தவர் மீதான கரிசணை மற்றும் தியாகம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் சிறப்புக்களை உலகிற்கு உரைப்பதாகவும் அமைந்துள்ளது.

இன, மத பேதமின்றி ஒரே இலங்கை மக்களாக ஒன்றிணைந்து எமது தாய்நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்லவும், சுதந்திரம், சமத்துவம், மனித மாண்புகள் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்ப நோன்புப் பெருநாள் அருட்கொடையாக அமைய வேண்டும்.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் மூலம் இறைவனுக்கும் அடியானுக்கும் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை உருவாக்கி அதன் மூலம் உயர்ந்த மனித நற்பண்புகள் மற்றும் ஒழுக்க விழுமியங்களின் மதிப்பை எடுத்துரைப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

பரஸ்பர நல்லிணக்கத்துடனும், மனிதாபிமான நெருக்கத்துடனும் நாம் நடந்து கொண்டால்,உலகம் இதனைவிட மிகவும் அமைதியானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ரமழானின் மூலம் கிடைக்கும் உயர் பெறுமானங்கள் இந்த நாட்டில் வாழும் மூவின மக்களுக்கும் அமைதியை கொண்டுவரட்டும் என்ற எதிர்பார்ப்புடன் இலங்கையிலும், தொழில் நிமித்தம் வெளிநாடுகளில் வாழும் புத்தளம் மாவட்ட சகோதரர்களுக்கும் மகிழ்ச்சி நிறைந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், காஸாவுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்தி, காஸா மண்ணில் தாக்குதலை முன்னெடுத்து வரும் இஸ்ரேலின் கொடூர செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதுடன், காஸா மக்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கவும், புனித மஸ்ஜிதுல் அக்ஸாவை பாதுகாக்கவும் இந்த தருணத்தில் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.

Post a Comment

Previous Post Next Post