மின்னல் தாக்கி மீனவர் பரிதாபமாக உயிரிழப்பு - கற்பிட்டியில் சோகம்!


ரஸீன் ரஸ்மின்

புத்தளம் , கற்பிட்டி - கண்டல்குழி கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற மீனவர் ஒருவர் நேற்று (25) மின்னல் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கடலுக்குள் வீழ்ந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி - கண்டல்குழி பகுதியைச் சேர்ந்த என்டன் திசாநாயக்க லக்‌ஷ்மன் திசாநாயக்க (வயது 40) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி காணாமல் போயுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் நேற்று (25) இரண்டு மீனவர்களுடன் மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது, கரையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடும் இடியுடன் மழை பெய்து கொண்டிருந்ததாகவும், அதன்போது தீடீரென மின்னல் தாக்குதலுக்கு உள்ளான குறித்த மீனவர் கடலுக்கு வீழ்ந்து காணாமல் போயுள்ளார் என அவருடன் பயணித்த ஏனைய இரண்டு மீனவர்களும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments