சாஹிப், எம்.ஏ.ஏ.காசிம்
புத்தளம் மாவட்டத்தின் மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்குற்பட்ட பாண்டியமடுவ கிராமத்தில் நேற்று (17) இரவு புகுந்த காட்டு யானையொன்று தனியாருக்கு சொந்தமான நெல் களஞ்சியசாலை கட்டிடம் ஒன்றினை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
மஹாகும்புக்கடவல - பாண்டியமடுவ கிராமத்தில் வசித்து வரும் ஆர்.எச்.எம்.அஜித் குமார என்பவருக்கு சொந்தமான நெல் களஞ்சியசாலையே இவ்வாறு பெரிய காட்டு யானையொன்று தாக்கி சேதப்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
பெரும் சத்தத்துடன் வீட்டு வளவுக்குள் நுழைந்த காட்டு யானை, வீட்டோடு கட்டப்பட்டிருந்த களஞ்சியசாலையை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த சில நெல்மூடைகளையும் வெளியே இழுத்துச் சென்றுள்ளது.
மேலும், அங்கு இருந்த பயன் தரும் சில மரங்களுக்கும் சேதம் விளைவித்துச் சென்றுள்ளதாகவும் அந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த யானை வீட்டு வளவுக்குள் நுழைந்து உடைக்க ஆரம்பித்த போது வீட்டில் தானும், தனது மனைவி மற்றும் மூன்று பெண் பிள்ளைகளும் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், பெரும் சத்தத்துடன் களஞ்சியசாலையை உடைத்துக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
எனினும், வீட்டுக்குள் இருந்து கூக்குரலிட்ட போது கிராமத்திலுள்ள அயலவர்கள் பலத்த சிரமத்தின் மத்தியில் காட்டு யானையை துரத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பல வருடங்களாக தமது வீட்டினை நெல் உட்பட தானிய களஞ்சியசாலையாக பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் 18 இலட்சம் ரூபா செலவில் புதிய நெல் களஞ்சியசாலையை நிர்மாணித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
இவ்வாறு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்த களஞ்சியசாலை கட்டிடம் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், அந்தக் கட்டிடம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், கட்டிடம் முழுவதுமாக ஆங்காங்கே வெடிப்புக்களும் காணப்படுவதாக உரிமையாளரான ஆர்.எச்.எம்.அஜித் குமார கவலை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொதுமக்களுக்கும் யானைக்கும் இடையில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் போராட்டத்தால் பல மனித உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு இரவுகளிலும் பெரும் அச்சத்துடன் வாழும் நிலை காணப்படுவதாகவும் அந்த பகுதியில் உள்ள மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
யானையின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பை பெறுவதற்கு வீடுகளை சுற்றி யானை மின் வேலி அமைக்க ஒரு மீற்றருக்கு 55 ஆயிரம் ரூபா செலவு செய்து வருவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரி இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றினைந்து அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் இன்று வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, யானைகளின் பிரச்சினையிலிருந்து தம்மை விடுவிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுகின்றனர்.