புத்தளம் பகுதியில் சுமார் 1 கோடியே 30 இலட்சம் ரூபாவிற்கு கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் நேற்று முன்தினம் (16) இரவு புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஜமுத்துக்களை விற்பனை செய்ய உள்ளதாக பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பு புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. இதன்போது 3 கஜமுத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
உளவாளி ஒருவரை பயன்படுத்தி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவர் மாவனெல்ல பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்றும் மற்றையவர் புத்தளம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் , அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்களையும் மேலதிக சட்ட நடவடிக்ககளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.