ரஸீன் ரஸ்மின்
எனது சேவைகளை புத்தளம் மாவட்டத்துக்கும் அப்பால் விரிவுபடுத்தும் நோக்கிலும், இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் ஏ.எம்.இன்பாஸ் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வேட்பாளராக கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஏ.எம் இன்பாஸ் இன்று (15) வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதனையடுத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
கற்பிட்டி பிரதேச சபை தவிசாளராகவும், கற்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கம், 25 வீட்டுத் திட்டம் மீனவர் சங்கம் என்பனவற்றின் தலைவராகவும் நீண்ட காலமாக மக்களுக்கு மனப்பூர்வமாக பணியாற்றிநிருக்கிறேன்.
கற்பிட்டி பிரதேச சபை தவிசாளராக பணியாற்றிய காலத்தில் கற்பிட்டி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்வி, உட்கட்டமைப்பு, சுகாதாரம், சுற்றுலாத்துறை, மீன்பிடி மற்றும் விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிறைவான அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டுள்ளேன்.
இந்த நிலையில், நாடுபூராகவும் எனது சேவைகளை விரிவுபடுத்தி, இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறேன்.
புத்தளம் மாவட்டத்தில் மாத்திரமின்றி, நாடுபூராகவும் தேர்தல் பிரச்சாரப் பணிகளை முன்னெடுக்க உள்ளேன். நிச்சயமாக 5 இலட்சத்திற்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.