ரஸீன் ரஸ்மின்
வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்மாகாண ஆளுநராக கடமைபுரியும் விலி கமகே ஓய்வுபெறவுள்ள நிலையில், அந்த இடத்திற்கு தற்போது வடமேல் மாகாண ஆளுநராக கடமையாற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவை நியமிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதி அலுவலக பிரதானி சாஹல ரத்னாயக்க ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டால் வெற்றிடமாகும் வடமேல் மாகாண ஆளுநர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
எனினும் ஹாபிஸ் நஸீர் அஹ்மட்டை கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்து, கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றி வரும் செந்தில் தொண்டமானை வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்குமாறும் சில தரப்பினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதேவேளை, திடீர் விபத்தொன்றில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் மனைவி சமரி பெரேராவை வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் சிலர் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தியமிக்கப்படுவது உறுதியாகியுள்ள நிலையில், வடமேல் மாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்கள் என அரசியல் மட்டத்தில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் வரும் ஓரிரு வாரங்களில் ஆளுநர் பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.